ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்

Published On 2021-10-27 06:03 GMT   |   Update On 2021-10-27 06:03 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடக்கிறது. டிசம்பர் மாதம் 14-ந்தேதி பரமபதவாசல் திறக்கப்படுகிறது.
தேய்பிறை, வளர்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி வரும். அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு அடுத்ததாக 11-ம் நாள் வருவது ஏகாதசி திதி. ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். சில வருடங்களில் ஒரு ஏகாதசி அதிகமாகி 25 ஏகாதசிகளும் வருவதுண்டு.

பெருமாளை வழிபட உகந்த திதியாக ஏகாதசி இருக்கிறது. அதிலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும்.

வைணவ தலங்கள் பலவற்றில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, பிரமாண்டமாக கொண்டாடப்பட்டாலும் வைகுண்ட ஏகாதசி என்றதும் திருச்சி ஸ்ரீரங்கமே நினைவுக்கு வரும். ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசிக்கு ஒரு வரலாறு உண்டு.

திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும் மகிழ்ந்தும் நெகிழ்ந்துமாகி நின்ற ஸ்ரீரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம். அதற்கு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதை ஏற்றுக் கொண்ட ெரங்கநாதரும் அப்படியே ஆகட்டும் என அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் டிசம்பர் 3-ந்தேதி திருநெடுங்தாண்டகத்துடன் தொடங்குகிறது. மறுநாள் 4-ந்தேதி திருமொழி திருநாள் தொடக்கம் (பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள்) விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 14-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும். நம்பெருமாள் பரமபதவாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஸ்ரீரங்கம் கோவிலை பொறுத்தவரை, "பாஞ்சராத்ர ஆகமம்' முறைப்படி, நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாதம் முன்கூட்டியே வரும் ஏகாதசி, "கைசிக ஏகாதசி' என அழைக்கப்படுகிறது. மார்கழியில் வரும் ஏகாதசி, "வைகுண்ட ஏகாதசி' எனப்படுகிறது. பொதுவாக, மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற்சவமும், ராப்பத்து உற்வசமும் கொண்டாடப்படும்.

சிலவேளை, மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத்திருநாளும் வந்தால், தை பிரம்மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம் கார்த்திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது. கார்த்திகை மாதத்தில் தான் பரமபத வாசலும் திறக்கப்படுகிறது. இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும்.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும் பக்தர்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைப் பாடுவார்கள். இந்த பத்து நாள் உற்சவம் அத்யயனோத்ஸவம் என்று அழைக்கப்படும். பகலில் நடப்பதால் பகல் பத்து உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பகல் பத்து உற்சவம் அரையர் சேவையுடன் டிசம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 24-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.

திருமங்கைமன்னன், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பாடல்களை கார்த்திகை தினத்தன்று பெருமாள் முன்னர் பாடினார். பெருமகிழ்ச்சி அடைந்த பெருமாள் திருமங்கை மன்னனிடம் என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு அவர் வைகுண்ட ஏகாதசி விழாவில் வேதங்களை கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப்பாடல்களை கேட்டருள வேண்டும் என்று கேட்க, அதற்கு பெரிய பெருமாளும் சம்மதித்தார்.

நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு நாதமுனி காலத்தில் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருமொழிப்பாடல்களையும், மற்ற ஆழ்வார்கள் பாடிச்சென்ற பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருளும் விதமாக பகல்பத்து மற்றும் ராப்பத்து உற்சவம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News