செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகரில் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல்- 5 பேரிடம் விசாரணை

Published On 2019-12-03 11:59 GMT   |   Update On 2019-12-03 11:59 GMT
அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் கண்ணாடிகள் உடைந்தன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள். இதை கண்டித்து விருதுநகர் மாவட்டம், கல்லூரணியைச் சேர்ந்த தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதற்கு விருதுநகர் மாவட்டத்தில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் விருதுநகர் ராமமூர்த்தி ரோடு மேம்பாலம், அருப்புக்கோட்டை தனியார் பள்ளி அருகில், கல்லூரணி, திருச்சுழி சிலுக்குப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் இந்திரா நகர் பகுதிகளில் சென்று கொண்டிருந்த 5 அரசு பஸ்கள் மற்றும் ஒரு தனியார் பஸ் மீது சமூக விரோதிகள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தயதில் தமிழ்ப்புலிகள் தலைவரின் கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் பஸ்கள் மீது கல்வீசியது தெரியவந்தது. இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் டிரைவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் இன்று காலை 6 மணிக்கு பிறகே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
Tags:    

Similar News