செய்திகள்

பருப்பு வகைகள் விலை வீழ்ச்சி

Published On 2016-08-14 22:41 GMT   |   Update On 2016-08-14 22:41 GMT
வடமாநிலங்களில் விளைச்சல் அதிகரித்ததன் எதிரொலியாக பருப்பு வகைகள் விலை வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளது. அதேபோல், சர்க்கரை விலையும் குறைந்துள்ளது.
சென்னை:

வடமாநிலங்களில் விளைச்சல் அதிகரித்ததன் எதிரொலியாக பருப்பு வகைகள் விலை வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளது. அதேபோல், சர்க்கரை விலையும் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ துவரம் பருப்பு விலை ரூ.200-ஐ தாண்டியது. இதன் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து துவரம் பருப்பை அதிகமாக இறக்குமதி செய்தது. இந்த இறக்குமதி பருப்பில் இருந்து தமிழக அரசு கூடுதல் ஒதுக்கீட்டை பெற்று கூட்டுறவு கடைகள் மூலம் ஒரு கிலோ துவரம் பருப்பை ரூ.110-க்கு விற்பனை செய்தது. ஆனால், பலசரக்கு கடைகளில் கூடுதல் விலையிலேயே துவரம் பருப்பு விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே, வட மாநிலங்களில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை அதிக அளவு பெய்துள்ளதால், துவரை விளைச்சலும் அதிகரித்துள்ளது. மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு மூட்டைகளும் சந்தைக்கு விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக பருப்பு வகைகள் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வாரம் 100 கிலோ எடை கொண்ட ஒரு கிலோ துவரம் பருப்பு (முதல் ரகம்) மூட்டை ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது, அது ரூ.12 ஆயிரமாக விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150-ல் இருந்து ரூ.130 ஆக விலை சரிந்துள்ளது.

2-வது ரகம் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.130-ல் இருந்து ரூ.110 ஆகவும், தான்சானியா நாட்டு துவரம் பருப்பு ரூ.110-ல் இருந்து ரூ.90 ஆகவும் விலை குறைந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறும்போது, "இந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவரை அறுவடை முடிந்து புதுப்பருப்பு சந்தைக்கு வரத் தொடங்கும் போது துவரம் பருப்பு விலை மேலும் குறையும். அதே நேரத்தில் பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் ஆப்பிரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது துவரம் பருப்பு இறக்குமதிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். தமிழக அரசும் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் ஒதுக்கீட்டை பெறுவதால், இந்த ஆண்டு இறுதியில் துவரம் பருப்பு விலை மூட்டைக்கு மேலும் ரூ.2 ஆயிரம் வரை குறையும்" என்றார்.

கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையான உளுந்தம் பருப்பு மூட்டை தற்போது ரூ.13,400 ஆக விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ரூ.160-ல் இருந்து ரூ.140 ஆக விலை சரிந்துள்ளது. 2-வது ரக பர்மா உளுந்தம் பருப்பு ரூ.140-ல் இருந்து ரூ.120 ஆகவும், பாசிப் பருப்பு ஒரு கிலோ ரூ.110-ல் இருந்து ரூ.80 ஆகவும், 2-வது ரக பாசிப்பருப்பு ரூ.100-ல் இருந்து ரூ.70 ஆகவும் விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில் கடலை பருப்பு விலை ரூ.80-ல் இருந்து ரூ.110 ஆக விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.4,150-க்கு விற்பனையான 100 கிலோ சர்க்கரை மூட்டை தற்போது ரூ.4,030 ஆக விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ.43-ல் இருந்து ரூ.41 ஆக விலை சரிந்துள்ளது.

Similar News