வழிபாடு
சொர்க்கவாசல் வழியாக கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளிய காட்சி.

சேலம் மாவட்ட பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு

Published On 2022-01-13 05:35 GMT   |   Update On 2022-01-13 05:35 GMT
வைகுண்ட ஏகாதசி திதியை ஒட்டி எடப்பாடி பகுதியில் உள்ள பெருமாள் ஆலயங்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்துகளின் முக்கிய விரதவழிபாட்டில் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி. தமிழகத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி வெகுவிமர்சியாக கொண்டாடபட்டு வருகிறது.

சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களிலும் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை அழகிரி நாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து ரத்னகிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர்.

பின்னர் கோவிலின் வடபுறம் அமைந்துள்ள சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாகசுவாமி பல்லகில் பவனி வந்தார். இதனை தொடர்ந்து பெருமாளும் தாயாரும் திருக்கோவிலை சுற்றி வலம் வந்த பின் பெருமாளுக்கும் தாயருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், அம்மாப்பேட்டை சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவில், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், 2வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசாமி கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், மகேந்திரபுரி எஸ்.சி.சி.பி. காலனியில் உள்ள வலம்புரி வரசித்தி விநாயகர் கோவில் மற்றும் சீனிவாசப்பெருமாள் கோவில், சின்னதிருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோவில் பெரியபுதூரில் உள்ள வெங்கடேஸ்வரா பெருமாள் கோவில் உள்பட சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக இருந்தது.

வைகுண்ட ஏகாதசி திதியை ஒட்டி எடப்பாடி பகுதியில் உள்ள பெருமாள் ஆலயங்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் ஆலயத்தில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் தொடங்கிய நிகழ்வில், கோ பூஜை, சுவாமி அழைப்பு மற்றும் பல்வேறு யாக வேள்விகளை தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்ம பெருமாள் பரமபத வாயில் என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பக்தர்கள் கோவிந்தா...... கோவிந்தா....... என்று கோசம் எழுப்பி, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பரமபத வாயில் மேல் பகுதியில் அமைந்துள்ள பல்லி உருவத்தை வணங்கிய பக்தர்கள் பரமபத வாயில் வழியாக வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பழைய எடப்பாடி சென்றாய பெருமாள் ஆலயம், வெள்ளைக்காரடு திம்மராய பெருமாள் திருகோவில், பூலாம்பட்டி அடுத்த கூடல் மலைமீது அமைந்துள்ள மாட்டுப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் ஆலயங்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி கோவில் கோட்டையில் அமைந்துள்ளது. மன்னர்கள் காலத்தில் இந்த திருக்கோவில் கட்டப்பட்டது. இங்கு பெருமாள் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில் இன்று வைகுண்ட ஏகாதேசி பெருவிழாவை முன்னிட்டு ஆத்தூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பின்பு புஷ்ப பல்லக்கில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் தீபாராதனைய்ம் நடந்தது. பின்னர் அதிகாலை 5.20 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக சுவாமி பல்லக்கில் எழுந்தருளினார். பின்பு சுவாமி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது

Tags:    

Similar News