செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் - தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தல்

Published On 2021-03-02 02:13 GMT   |   Update On 2021-03-02 02:13 GMT
மாநில அரசின் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை:

பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு உள்ள நிலையில், அதன் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். இதுகுறித்து மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

மத்திய அரசின் வரி விதிப்புகள் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.70 ஆக உயர்கிறது. ஆனால் இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாயை பல வழிகளில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுக்கிறது. அதே நேரத்தில் மாநில அரசு விதிக்கும் வரி ரூ.27 ஆக உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் மாநில அரசு மக்களை திசை திருப்புகிறது. மாநில அரசு வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதிலும் சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரேயின் ஒர்லி தொகுதியில் இரவு நேர விடுதிகள் நள்ளிரவை தாண்டி திறந்து உள்ளன. ஆதித்ய தாக்கரே நைட் கிளப்புகளின் சாம்பியனாக உள்ளார்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால் ஒர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரேயின் நோக்கம் பின்பற்றப்படுகிறது.

மந்திரி சஞ்சய் ரதோட் ராஜினாமா விவகாரத்தில், இறந்த இளம்பெண்ணின் ஆடியோ உரையாடல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். யவத்மாலில் ஒரு பெண்ணின் கருக்கலைப்பு பற்றியும், அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றியும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News