செய்திகள்
கோப்புபடம்

பயோ டீசலாக மாற்றும் திட்டம்-ஒரு முறை மட்டும் எண்ணையை பயன்படுத்த வேண்டுகோள்

Published On 2021-08-04 07:55 GMT   |   Update On 2021-08-04 11:12 GMT
புதிதாக பயன்படுத்தும் எண்ணையின் தன்மை 15 டி.பி.சி., என்ற அளவில் இருக்கும். அதே எண்ணையை பலமுறை பயன்படுத்தும் போது 25 டி.பி.சி., என்ற அளவை தாண்டி உடலுக்கு கேடு விளைவிக்கும்.
உடுமலை:

உணவு பாதுகாப்புத்துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் பயன்படுத்தப்படும் எண்ணை பயோ டீசலாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து உடுமலையில் உள்ள  பேக்கரி, இனிப்பகங்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அதில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை பேசியதாவது:-

உணவகங்கள், ஓட்டல்கள் மற்றும் காரம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணை மீண்டும் பயன்படுத்த வெப்பப்படுத்தும் போது எண்ணையில் உள்ள கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது.

இதனால் பயன்படுத்தும் மக்களுக்கு இதயநோய், புற்று நோய், நரம்பியல் சிதைவு, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.

புதிதாக பயன்படுத்தும் எண்ணையின் தன்மை 15 டி.பி.சி., என்ற அளவில் இருக்கும். அதே எண்ணையை பலமுறை பயன்படுத்தும் போது 25 டி.பி.சி., என்ற அளவை தாண்டி உடலுக்கு கேடு விளைவிக்கும்.இதனை கண்டறிய போலரி மீட்டர் என்ற கருவி உள்ளது. இதனை உரிமையாளர்கள், பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தலாம்.

பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தாமல் இருக்க அதனை பயோ டீசலாக மாற்றும் மறு சுழற்சி முறையை உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு மாவட்டம் தோறும் நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழங்கும் கேன்களில் பயன்படுத்திய  எண்ணையை சேகரித்து வைத்திருந்தால் அவர்களே ஒரு லிட்டர் ரூ. 25க்கு வாங்கிக்கொள்கின்றனர்.

இவ்வாறு மாவட்ட நியமன அலுவலர் பேசினார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், வியாபாரிகள் சங்கத்தலைவர் பாலநாகமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News