செய்திகள்
நீட் தேர்வு மோசடி

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் - சான்றிதழ் சரிபார்ப்பு குழுவுக்கும், தரகர்களுக்கும் தொடர்பு?

Published On 2019-10-14 05:04 GMT   |   Update On 2019-10-14 05:04 GMT
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கல்லூரி சான்றிதழ் சரிபார்ப்பு குழுவுக்கும், இடைத்தரகர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தேனி:

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசனின் மகன் உதித்சூர்யா கடந்த மாதம் 26-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே போல நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பிரவீன், ராகுல், அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவர் இர்பான் சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். அவரது தந்தை முகமது சபியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு திருப்பமாக சென்னையைச் சேர்ந்த மாணவி பிரியங்கா மற்றும் அவரது தாய் மைனாவதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோர் ஜாமீன் கேட்டு தேனி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் கடந்த 11-ந் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், இவ்வழக்கில் புரோக்கர் ரஷீத்தை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? முறைகேட்டில் உடந்தையாக இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் விசாரிக்காதது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.


மேலும் அது குறித்த அறிக்கையை அக்டோபர் 14-ந் தேதி (இன்று) சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி 6 கல்லூரிகளைச் சேர்ந்த சான்றிதழ் சரிபார்ப்பு குழுவுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதன்படி தேனி அரசு மருத்துவ கல்லூரியின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவில் இடம் பெற்ற நிர்வாக அலுவலர் சாய் சந்திரன், உதவி அலுவலர் ராஜபாண்டி, இளநிலை அலுவலர் கருப்பசாமி, உதவியாளர் வனிதா, மோசஸ் உள்பட 10 பேர் தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகினர். நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை வரை நீடித்தது. சான்றிதழ் சரிபார்ப்பு குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் மாணவர்களிடம் எத்தகைய முறையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது? இதற்காக வேறு யாரேனும் அழுத்தம் கொடுத்தனரா? மதிப்பெண் திருத்தப்பட்டது குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்ததா? என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் குழுவில் இடம் பெற்றிருந்த சிலருக்கும், புரோக்கர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தேகித்துள்ளனர். விசாரணை முடிந்து அவர்கள் சென்ற பிறகு சந்தேகப்படும்படியான நபர்களை மீண்டும் வரவரழைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை இன்று தேனி கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர்.

இதனிடையே சிறையில் உள்ள மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீன், ராகுல் ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு குழுவில் 24 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் 10 பேர் மட்டுமே நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் சில கல்லூரிகளில் இருந்து 14 பேர் வராததால் அவர்கள் மீதும் சந்தேகம் வலுத்துள்ளது. எனவே அவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News