செய்திகள்
நெல்லையில் கலெக்டர் விஷ்ணு தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.5¾ கோடி இழப்பீடு - கலெக்டர் விஷ்ணு தகவல்

Published On 2021-02-20 18:09 GMT   |   Update On 2021-02-20 18:09 GMT
நெல்லை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.5¾ கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
நெல்லை:

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், வேளாண்மை துறை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான விவசாயிகள் தற்போது, நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதால் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்றும், நெல் அறுவடை எந்திரத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே அரசு அதிக அளவில் நெல் அறுவடை எந்திரங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்கள்.

விவசாயி பெரும்படையார்:-

களக்காடு வனப்பகுதியில் பன்றி தொல்லை அதிகம் உள்ளது. எனவே காட்டுப்பன்றியை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். களக்காடு பகுதியில் உற்பத்தி செய்கின்ற வாழைக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்திட வேண்டும். களக்காட்டில் வாழைத்தார் கொள்முதல் நிலையம் மற்றும் பதப்படுத்தப்பட்ட கிட்டங்கி உருவாக்கி தரவேண்டும்.

ராஜகுரு:- கங்கைகொண்டான் மான் பூங்காவில் உள்ள மான்கள் அங்கிருந்து தப்பி சென்று இரவு நேரங்களில் அபிஷேகப்பட்டி பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை அழிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானூர் பகுதி விவசாயி ஒருவர் பேசுகையில், “மானூர், கானார்பட்டி பகுதியில் மின்சார தட்டுப்பாடு அதிகம் உள்ளது. விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய மும்முனை மின்சாரம் சரியாக வருவதில்லை. இதனால் விவசாயிகள் அவதிப்படுகிறோம்” என்றார்.

கலெக்டர் விஷ்ணு:- மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வெள்ளத்துரை:- பயிர் காப்பீடு தொகை கிடைக்காமல் 2 ஆண்டுகளாக விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறோம். விவசாய பணிகள் மும்முரமாக நடைபெறக்கூடிய காலத்தில் 100 நாள் வேலையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். எல்லோரும் 100 நாள் வேலைக்கு செல்வதால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லை. எனவே விவசாய பணிகள் மும்முரமாக நடைபெறும் நேரங்களில் அந்த வேலையை நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

இதைத் தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் தற்போது அணைகளில் 81 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. மாவட்டத்தில் 38 ஆயிரத்து 427 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. 602 ஹெக்டேரில் சிறுதானியங்களும், 7 ஆயிரத்து 494 ஹெக்டேரில் பயிறு வகைகளும், 663 ஹெக்டேரில் பருத்தியும், 33 ஹெக்டேரில் கரும்பும், 474 ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட 5607 ஹெக்ேடரில் பயிர் சாகுபடி செய்த 5 ஆயிரத்து 798 விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 77 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 40 இடங்களில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்கள் தொடர்பான புகார்களுக்கு என்ற 7305611085 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News