ஆன்மிகம்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பாதுகாப்பு நடைமுறை இன்று முதல் தொடங்கும்

Published On 2020-12-12 04:35 GMT   |   Update On 2020-12-12 04:35 GMT
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பாதுகாப்பு நடைமுறை இன்று முதல் தொடங்கும் என்று கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் மோகன் கூறினார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கீழ் இயங்கும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அணுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில், சனிக்கிழமை ்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிபெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த கோவிலில், இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையே சனிபெயர்ச்சி விழா என்கிறோம்.

விழா பாதுகாப்பு குறித்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், புதுச்சேரி கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த்மோகன், நேற்று முன்தினம் மாலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தின் முடிவில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு, முழு பாதுகாப்பு வழங்குவது குறித்து, காவல் துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பக்தர்களுக்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

விழாவையொட்டி, புதுச்சேரியில் இருந்து சிறப்பு படை வரவழைக்கப்படும். இன்று (சனிக்கிழமை) முதல் போலீசாரின் பாதுகாப்பு நடைமுறைகள் தொடங்கப்படும். கோவில் நிர்வாகம் ஆன் லைன் மூலம் முன் பதிவு செய்தவர்களை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

அதன்படி உரிய சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காவல்துறையினர், கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்ற வேண்டும். சட்டம்- ஒழுங்கு பிரச்சினை எதுவும் இன்றி செயல்பட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காரைக்கால் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, காரைக்காலில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த்மோகன் ஆய்வு செய்து, உரிய ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிஹாரிக்காபட், போலீஸ் சூப்பிரண்டுகள் வீரவல்லபன், ரகுநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News