ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவில் நடராஜர் திருநடன காட்சி நடந்தபோது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் நடராஜர் திருநடன காட்சி

Published On 2021-01-30 04:52 GMT   |   Update On 2021-01-30 04:52 GMT
நெல்லையப்பர் கோவில் திருவிழாவில் நடராஜர் திருநடன காட்சி நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கடந்த 22-ந்தேதி நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் உள்ள தைப்பூச மண்டலத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

நேற்று நெல்லையப்பர் கோவிலில் உள்ள சவுந்திர சபா மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சி நடைபெற்றது. இதில் நடராஜர் திருநடனத்தை கண்டு அம்பாள் மெய்மறந்த நிலையில் சுவாமி திடீரென மாயமானார்.

இதையடுத்து ரதவீதியில் சுவாமியை ‌தேடி அம்பாள் வந்தபோது, சந்திப்பிள்ளையார் கோவில் அருகே அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது. சுவாமி நெல்லையப்பர் கோவில் எதிரே உள்ள சந்திர புஷ்கரணி என்கிற வெளி தெப்பத்தில் சுவாமி-அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
Tags:    

Similar News