செய்திகள்
கைது

கள்ளத்தொடர்பை துண்டித்த பெண் கழுத்தை நெரித்து கொலை - கொத்தனார் கைது

Published On 2019-12-09 14:29 GMT   |   Update On 2019-12-09 14:29 GMT
திருவாடானை அருகே கள்ளத்தொடர்பை துண்டித்ததால் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சீர்தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி அமலசெல்வி(வயது 40). இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்கிறார்கள். அமலசெல்வியுடன் அவருடைய மகள் உள்ளார்.

அமலசெல்வி தினந்தோறும் தேவகோட்டைக்கு செல்வது வழக்கம். கடந்த மாதம் 8-ந்தேதி கட்டிட வேலைக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரின் உறவினர்கள் திருவாடானை போலீசில் புகார் செய்தனர். அந்த புகார் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து போலீசார் விசாரித்தனர். இதில் கண்ணங்குடியை அடுத்த சித்தானூரை சேர்ந்த கொத்தனார் கண்ணன் என்பவர் அமலசெல்வியிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவர் போலீசில் கூறியதாவது:-

அமலசெல்விக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. ஆனால் திடீரென என்னுடன் பழகுவதை அமலசெல்வி தவிர்த்து வந்தார். இதனால் அவரை பழிவாங்க திட்டமிட்டேன். அதன்படி கடந்த மாதம் 8-ந்தேதி வழக்கமான செல்போன் எண்ணில் இருந்து அழைக்காமல் வேறு எண்ணில் இருந்து அவரை தொடர்பு கொண்டேன். கடைசியாக உன்னுடன் ஒரே ஒரு நாள் மட்டும் நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறேன் என்றேன். அதற்கு அவர் சம்மதித்து, சித்தானூர் காட்டுப்பகுதிக்கு வந்தார். அங்கு நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். பின்னர் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவரை திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், இன்ஸ்பெக்டர் கலாராணி, சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அமலசெல்வியின் எலும்புக்கூடுகள், அவர் அணிந்திருந்த சேலை மற்றும் பொருட்கள் கிடந்தது. இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News