செய்திகள்
டி.கே.சிவக்குமார் கைது

கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமார் கைது - அமலாக்கத்துறை அதிரடி

Published On 2019-09-03 15:47 GMT   |   Update On 2019-09-03 15:47 GMT
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கர்நாடக முன்னாள் நிதி மந்திரி சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
புதுடெல்லி:

கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.

கடந்த 2017, ஆகஸ்டில் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய தொழில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்கள் என்று டெல்லி, பெங்களூருவில் உள்ள 60-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இச்சோதனையின்போது, டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் கணக்கில் காட்டாத ரூ.8.59 கோடி சிக்கியது. அத்துடன், ஹவாலா பணப்பரிமாற்றத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் டி.கே.சிவக்குமார் முதல் குற்றவாளியாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.

இதற்கிடையே, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை தலைநகர் டெல்லியில் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
Tags:    

Similar News