செய்திகள்
கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

கடலூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற பள்ளி மாணவி திடீர் மரணம்

Published On 2020-12-23 14:46 GMT   |   Update On 2020-12-23 14:46 GMT
கடலூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற பள்ளி மாணவி திடீரென இறந்தாள். இதனால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகள் கீர்த்திகா (வயது 10). இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு சந்திரன், தனது குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கீர்த்திகாவுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவளை, பெற்றோர் சிகிச்சைக்காக தூக்கணாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு டாக்டர் இல்லை. இதையடுத்து பணியில் இருந்த செவிலியர் ஒருவர், கீர்த்திகாவுக்கு ஊசி போட்டு, மாத்திரை கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது.

இதையடுத்து சந்திரன், கீர்த்திகாவை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார். இதற்கிடையே அதிகாலை 2 மணி அளவில் கீர்த்திகாவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவளை பெற்றோர்கள், தூக்கணாம்பாக்கம் ஆரம்ப அரசு சுகாதார நிலையத்துக்கு மீண்டும் அழைத்து சென்றனர். அங்கு அவளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவள், மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே கீர்த்திகா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கீர்த்திகாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே இதுகுறித்து அறிந்த சந்திரனின் உறவினர்கள் நேற்று மதியம் கடலூருக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கீர்த்திகாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறை முன்பு கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கீர்த்திகாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூக்கணாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இறந்த கீர்த்திகாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். அதற்கு போலீசார், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட சிறுமியின் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் ¼ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News