செய்திகள்
கோப்புபடம்

கொரோனா தடுப்பூசியின் பின்விளைவுகளை கண்காணிக்க சிறப்புக்குழு - தமிழக அரசு அமைத்தது

Published On 2021-03-12 08:03 GMT   |   Update On 2021-03-12 08:03 GMT
தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.
கொரோனா தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசியை ஆர்வமுடன் போட்டு வருகிறார்கள். பொது மக்களும் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் இதுவரை 11 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது. இதில் 10.98 லட்சம் பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போடுவதில் ஆர்வமுடன் உள்ளனர்.

கொரோனா தடுப்பூசி போடுவதால் பின் விளைவுகள் ஏதேனும் ஏற்படுகிறதா? என்பதை கண்காணிக்க சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த கண்காணிப்பு குழுவினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பு பல்வேறு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து இணை நோய்கள் பற்றிய சான்றிதழ்களையும் கேட்கிறார்கள்.

அதன் பிறகே தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்ட பின்னர் அரை மணிநேரம் ஆஸ்பத்திரியிலேயே டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். இந்த அரை மணிநேரத்தில் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் வெளியேற ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனுமதி அளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News