செய்திகள்
வடகாடு பகுதியில் நடவுப்பணிக்காக நாற்றுகள் தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

வடகாடு பகுதியில் நடவுப்பணி தீவிரம் - பாரம்பரிய நெல் ரகங்களை மானிய விலையில் வழங்க கோரிக்கை

Published On 2021-09-25 14:36 GMT   |   Update On 2021-09-25 14:36 GMT
வடகாடு பகுதியில் நடவுப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வடகாடு:

வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். வழக்கமாக இப்பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக சம்பா மற்றும் குறுவை நெல் சாகுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் சம்பா நடவு பணிக்காக விவசாயிகள் தங்களது நெல் வயல்களை உழுது தயார் படுத்தியுள்ளனர். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி அந்த நிலங்களில் தற்போது நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும் குளங்களுக்கு செல்லும் வரத்து வாரிகள் இன்னும் சீரமைக்க படாமல் இருப்பதாகவும் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறை கூறுகின்றனர்.

மேலும் நெல் பயிருக்கான நெல் காப்பீட்டு திட்டத்தையும் அறிவிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு இப்பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டும் இதுநாள் வரை காப்பீடு தொகை கிடைக்கவில்லை, அதனை வழங்க வேண்டும் என்றும், இப்பகுதிகளில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், பாரம்பரிய விதை நெல்லை மானியவிலையில் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News