செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

Published On 2020-10-15 05:17 GMT   |   Update On 2020-10-15 05:17 GMT
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் ஜாமீன் மனுவை நீதிபதி ஒத்திவைத்தார்.
மதுரை:

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், போலீஸ்காரர்களான முத்துராஜ், தாமஸ்பிரான்சிஸ் உள்ளிட்ட சிலர் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மாவட்ட கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தநிலையில் இந்த வழக்கில் சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல், ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் மனுதாரர் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். தந்தை-மகன் இருவரும் அடித்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதற்கான சாட்சிகள் உள்ளன. இந்த வழக்கில் இதுவரை 32 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு உள்ளது. மனுதாரருக்கு ஜாமீன் அனுமதிக்கும்பட்சத்தில் அவர் சாட்சிகளை கலைக்க நேரிடும். இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்து வாதாடுவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News