செய்திகள்
வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை சார்பில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

சிவகாசியில் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை சார்பில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் - பட்டாசு ஆலை அதிபர்கள் பங்கேற்பு

Published On 2021-02-20 13:02 GMT   |   Update On 2021-02-20 13:02 GMT
சிவகாசியில் உள்ள வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி:

சிவகாசியில் உள்ள வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த வாரம் வெடி விபத்து ஏற்பட்டு 21 பேர் பரிதாபமாக கருகி பலியானார்கள்.

இந்த விபத்தில் 25-க்கும் அதிகமானவர்கள் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் காக்கிவாடன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையிலும் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு தொழிலாளிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த இரண்டு விபத்துக்களும் பட்டாசு ஆலை அதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து நடந்த பட்டாசு ஆலைகளை வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

இந்தநிலையில் ஆனையூரில் உள்ள வெடிப்பொருள் கட்டுபாட் டுத்துறை அலுவலகத்தில் நேற்று காலை பட்டாசு ஆலை அதி பர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன், டான்பாமா தலைவர் கணேசன் மற்றும் பட்டாசு ஆலை அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை தயாரிப்பது எப்படி என்றும், விதிமுறைகளை மீறாமல் பட்டாசுகளை தயாரிக்க தொழிலாளர்களை வலியுறுத்த வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு அதிகாரி சுந்தரேசன் பேசினார். பின்னர் மத்திய அரசு சார்பில் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு கையேடு ஒன்றினை மத்திய அரசு அதிகாரி பாண்டே வெளியிட, டான்பாமா கணேசன் பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News