செய்திகள்

பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

Published On 2019-02-27 04:09 GMT   |   Update On 2019-02-27 05:47 GMT
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அந்நாட்டிற்கு வலியுறுத்தி உள்ளது. #AmericaAdjoursPakistan #PulwamaAttack
வாஷிங்டன்:

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று  இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.

இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்திய விமானப்படையினர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது நேற்று நடத்திய தாக்குதலையடுத்து, இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உடன் பேசினேன். அப்போது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பராமரிப்பது தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்தேன்.

இதேபோல் பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி குரேஷியிடம் பேசினேன். அவரிடம், பாகிஸ்தானில் உள்ள அனைத்து  பயங்கரவாத அமைப்புகள் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தேன்.



இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை தவிர்த்துவிட்டு, நேரடியாக கலந்துரையாடி இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வை கொண்டு வர வேண்டும் என இரு நாடுகளின் மந்திரிகளிடமும் வலியுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல் பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் பிறக்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #AmericaAdjoursPakistan #PulwamaAttack

Tags:    

Similar News