ஆன்மிகம்
கோவிலில் நேற்று இரவு பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா: பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம்

Published On 2021-03-12 04:19 GMT   |   Update On 2021-03-12 04:19 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்று விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது. கோவிலில் கார்த்திகை தீபம் உள்பட பல்வேறு விழாக்கள் நடக்கிறது. திருமாலும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி முடி காணாமல் திகைத்தபோது, அவர் லிங்கோத்பவ மூர்த்தியாக அருள்பாலித்த திருநாளே மகா சிவராத்திரி என்று கூறப்படுகிறது. இதனால் மகா சிவராத்திரி உருவான திருத்தலம் என்ற சிறப்பும் பெற்றாகும்.

கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் கோவிலில் நேற்று உபயதாரர்கள் சார்பில் நடக்கும் லட்சார்ச்சனை உள்பட பல்வேறு சிறப்புப்பூஜைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், கோவில் சார்பில் அனைத்துப் பூைஜகளும் ஆகம விதிபடி எந்தத் தடையும் இல்லாமல் நடந்தது.

நேற்று காலை கோவிலில் பல்வேறு வண்ண மலர்களால் சாமி லட்சார்ச்சனை நடந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலில் பரவலாக காணப்பட்டது. மாலைக்கு பின் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கோவில் கொடிமரம் அருகில் பல்வேறு மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிவராத்திரியையொட்டி நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 4 கால பூஜைகளும் நடந்தது. முதல் கால பூஜையை பிரம்மாவும், 2-ம் கால பூஜையை திருமாலும், 3-ம் கால பூஜையை உமையாளும், 4-ம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் செய்ததாக ஐதீகம் உள்ளது.

பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சாமி சன்னதியின் பின்பகுதியில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இந்தப் பூஜையில் மட்டும் லிங்கோத்பவருக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும். பின்னர் தீபாராதனை நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்குள் வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக விலகலை கடைப்பிடிக்கவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. முகக் கவசம் அணியாமல் வந்த பக்தர்களை கோவில் ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி முகக் கவசம் அணிந்து வர அறிவுறுத்தினர்.

மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News