செய்திகள்
திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் படகில் இருந்து இறங்கியதை படத்தில் காணலாம்.

மழை வெள்ளம் சூழ்ந்ததால் படகில் நடந்த திருமணம்

Published On 2021-06-07 03:46 GMT   |   Update On 2021-06-07 03:46 GMT
திருவனந்தபுரம் அருகே கனமழையால் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் படகில் மணமேடை அமைத்து திருமணம் நடந்தது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் தகழியை சேர்ந்த ஆதிராவுக்கும் (வயது 23), செங்கன்னூரை சேர்ந்த அகிலுக்கும் (27) கடந்த மாதம் 23-ந் தேதி ஒரு மண்டபத்தில் திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால் திருமணத்தை இருவீட்டாரும் கலந்து பேசி தள்ளி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மணமகளின் இல்லத்தில் எளிமையாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் மழை வெள்ளம் இடைஞ்சலை ஏற்படுத்தியது. அதாவது, கனமழையால் மணப்பெண்ணின் வீட்டில் தண்ணீர் புகுந்து திருமணத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும் திருமணத்தை மீண்டும் தள்ளிப் போட விரும்பாத மணமகளின் தந்தை, படகை திருமண மேடையாக மாற்ற முடிவெடுத்தார். இதற்காக ஒரு பெரிய படகை 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து, அதில் திருமணத்தை நடத்தலாம் என மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவித்தார் அதற்கு அவர்களும் ஒத்துக் கொண்டனர்.

அதன்படி நேற்று முன்தினம் மிதக்கும் படகு முழுவதும் பூக்கள் கட்டி மணமேடையாக அலங்கரிக்கப்பட்டது. மணமக்கள் படகில் அமர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்டு பங்கேற்றனர். படகில் நடந்த திருமணம் வித்தியாசமான அனுபவம் என மணமக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News