செய்திகள்
கோப்புப்படம்

கேரள பாதிரியாரின் நிறுவனங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.14 கோடி சிக்கியது

Published On 2020-11-10 02:22 GMT   |   Update On 2020-11-10 02:22 GMT
கேரள பாதிரியாரின் நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனைகளில் ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

கேரளாவின் திருவல்லாவை மையமாக கொண்டு இயங்கி வரும் கிறிஸ்தவ சபை ஒன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளைகளை அமைத்து பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. இந்த சபையின் பாதிரியார், ஏழைகளுக்கு உதவுவதாக கூறி வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை பெற்று சட்ட விரோதமாக ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்திருப்பதாகவும், ஹவாலா மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து இந்த பாதிரியாரின் நிறுவனங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, சண்டிகர், பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான 66 இடங்களில் கடந்த 5-ந் தேதி சோதனை நடந்தது.

இவ்வாறு 2 முறை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.1,000, ரூ.500 நோட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து உள்ளது.

இந்த நிறுவனம் நாட்டின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், கேரளாவில் ஒரு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை என பல நிறுவனங்களை நடத்தி வருகிறது. மேலும் 30 அறக்கட்டளைகளையும் இயக்கி வருகிறது. இதில் பல அறக்கட்டளைகள் போலி என கண்டறியப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News