ஆன்மிகம்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிவாச்சாரியர்கள் சேவல் கொடியை ஏற்றும் காட்சி.

மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-01-23 05:01 GMT   |   Update On 2021-01-23 05:01 GMT
கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 28-ந் தேதி அதிகாலை 3 முதல் 5.30 மணிக்குள் நடைபெறுகிறது.
கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. நேற்று காலை கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. கோ பூஜையை தொடர்ந்து மூலவருக்கு பால், பன்னீர் சந்தனம், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த மூலவருக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

தைப்பூச விழாவை யொட்டி கோவில் முழுவதும் வண்ணமலர்களாலும் மாவிலை தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து முன் பிரகார மண்டபத்தில் சிவாச்சாரியார்களால் வேள்வி பூஜை நடைபெற்றது.இதையடுத்து விநாயகர் பூஜை, புண்யாகம், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், மருதாலமூர்த்தி, முருகன் வள்ளி, தெய்வானை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் வள்ளி தெய்வானையோடு சுப்ரமணியசாமி விநாயகர், வீரபாகு தேவர், சூலத்தேவர் ஆகியோரோடு கற்பகத்தரு வாகனத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

காலை சரியாக 7.30 மணிக்கு கோவில் முன்புறம் உள்ள கொடிமரத்தின் முன்பு மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரியன், சந்திரன், வேல், சேவல் சின்னம் பொறிக்கப்பட்ட கிருத்திகைகொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 8 மணிக்கு சேவற்கொடி கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். பின்னர் கொடிமரத்துக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்துசுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வயானை, விநாயகர் வீரபாகு தேவர் ஆகியோரோடு கற்பகத்தரு வாகனத்தில் வீதி உலா வந்தார்.மாலை 4 மணிக்குமூலவருக்கு அபிஷேகம் பூஜை தீபாராதனை நடைபெற்றது. 5 மணிக்கு அனந்தாசனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருதமலை கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) விமலா செவ்வாய் பக்தர்கள் குழு தலைவர் கணுவாய் தேவராஜ், செயலாளர் சிவமுருகன், சிவபக்தர்கள் நலச்சங்க தலைவர் பேரூர் ராஜேந்திரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழா நாட்களில் தினமும் காலை மாலை சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 27-ந்தேதி மாலை தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். 27-ந் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளிக்கிறார். தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 28-ந் தேதி அதிகாலை 3 முதல் 5.30 மணிக்குள் நடைபெறுகிறது.

இதை அடுத்து சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வயானை வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா வருகின்றனர்.கொரோனோ பரவல் காரணமாக பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு திருக்கோயில் நிர்வாகம் தடைவிதித்துள்ளது.இதனால் இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது பக்தர்களுக்கு அனுமதி இல்லை காலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர், கொரோனோ பரவல் காரணமாக பெரிய தேர் வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News