ஆன்மிகம்
திருநள்ளாறு

சிவபெருமானின் சப்த விடங்க தலங்கள்

Published On 2021-01-07 05:45 GMT   |   Update On 2021-01-07 05:45 GMT
உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் ஏழும்தான் ‘சப்த விடங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த சப்த விடங்க தலங்களையும், அதில் அருளும் தெய்வங்களையும், நடனங்களையும் இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் `சப்த விடங்க தலங்கள்' ஏழு இருக்கின்றன. இந்த 7 தலங்களிலும் இறைவன் சிவபெருமான், சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். இங்கு இறைவன் அருளிய தாண்டவங்கள் முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. ‘விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாதது’ என்று பொருள். உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் ஏழும்தான் ‘சப்த விடங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த சப்த விடங்க தலங்களையும், அதில் அருளும் தெய்வங்களையும், நடனங்களையும் இங்கே பார்க்கலாம்.

திருவாரூர் - வீதி விடங்கர் - அசபா நடனம்

திருநள்ளாறு - நகர விடங்கர் - உன்மத்த நடனம்

திருநாகைக்காரோகணம் - சுந்தர விடங்கர் - தரங்க நடனம்

திருக்காறாயில் - ஆதி விடங்கர் - குக்குட நடனம்

திருக்குவளை - அவனி விடங்கர் - பிருங்க நடனம்

திருவாய்மூர் - நீல விடங்கர் - கமல நடனம்

திருமறைக்காடு - புவன விடங்கர் - அம்சபாத நடனம்

அசபா நடனம் (திருவாரூர்)

கும்பகோணத்தில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் - வான்மீகிநாதர், தியாகராஜ பெருமான், இறைவி - கமலாம்பாள். இது சிதம்பரத்திற்கும் முந்தைய கோவில் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள ஈசன் ‘வீதி விடங்கர்’ என்று அழைக்கப்படு கிறார். இத்தல இறைவன் ஆடிய தாண்டவம் ‘அசபா நடனம்’ எனப்படுகிறது. உயிரின் இயக்கமான மூச்சுக் காற்று, உள்ளும் புறமும் சென்று வருவது போன்ற உன்னதத்தை உணர்த்துவது இந்த நடனம் ஆகும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய, கடன் தொல்லை நீங்க, உடல் பிணி அகல, திருமண வரம் பெற, வேலை கிடைக்க, தொழில் விருத்தியாக, குழந்தை வரம் வேண்டி என பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

உன்மத்த நடனம் (திருநள்ளாறு)

கும்பகோணத்தில் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநள்ளாறு பிராணேஸ்வரி உடனாய தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில். இது சனீஸ்வர பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள ஈசன் ‘நகர விடங்கர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆடிய நடனம் ‘உன்மத்த நடனம்’ ஆகும். இது பித்தனைப் போன்று ஆடுவது ஆகும். சனி தோஷம் நீங்க இத்தல இறைவனை வழிபடலாம்.

தரங்க நடனம் (திருநாகைக்காரோணம்)

கும்பகோணத்தில் இருந்து 67 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருநாகைக்காரோணம். இங்குள்ள ஆலய இறைவன் - காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர் என்றும், இறைவி - நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி என்றும் பெயர் பெற்றுள்ளனர். இங்குள்ள ஈசன் ‘சுந்தர விடங்கர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆடிய தாண்டவம் ‘தரங்க நடனம்.’ கடல் அலைகள் எழுவது போன்று ஆடுவது இதன் நடன முறையாகும். இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து வழிபட்டால், பாவங்களுக்கு மன்னிப்பும், இறுதியில் முக்தியும் கிடைக்கும்.

குக்குட நடனம் (திருக்காறாயில்)

கும்பகோணத்தில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். இங்குள்ள இறைவன் - கண்ணாயிரநாதர் என்றும், இறைவி - கயிலாயநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். பிரம்மனுக்கு ஆயிரம் கண்களுடன் ஈசன் அருளிய தலம் இது. இங்குள்ள ஈசன் ‘ஆதி விடங்கர்’ எனப்படுகிறார். இவர் ஆடிய நடனம் ‘குக்குட நடனம்.’ கோழியைப் போல் ஆடுவது இதன் அசைவாகும். பாவங்கள், சாபங்கள் அகலவும், கண் சம்பந்தப்பட்ட நோய் சரியாகவும் இங்குள்ள இறைவனை வழிபடலாம்.

பிருங்க நடனம் (திருக்குவளை)

கும்பகோணத்தில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் கோவில். இறைவன் -பிரம்மபுரீஸ்வரர், இறைவி - வண்டமர் பூங்குழலம்மை. இங்குள்ள ஈசன் ‘அவனி விடங்கர்.’ இவர் ஆடியது ‘பிருங்க நடனம்.’ வண்டு மலருக்குள் குடைந்து செல்வதைப் போன்றது இந்த நடனம். நவக்கிரக தோஷங்களைப் போக்கிக்கொள்ள, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்யலாம்.

கமல நடனம் (திருவாய்மூர்)

கும்பகோணத்தில் இருந்து 76 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருவாய்மூர். இங்குள்ள இறைவன் - வாய்மூர்நாதர், இறைவி - பாலினும் நன்மொழியம்மை. பிரம்மன் மற்றும் சூரியன் சாபம் தீர்த்த தலம் இது. இங்குள்ள ஈசன் ‘நீலவிடங்கர்.’ இவர் ஆடிய நடனம் ‘கமல நடனம்.’ தாமரை மலர் அசைவது போன்றது இந்த நடனம். இத்தல இறைவனை வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். கல்வி மற்றும் செல்வம் பெருகும்.

அம்சபாத நடனம் (திருமறைக்காடு)

கும்பகோணத்தில் இருந்து 106 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருமறைக்காடு. இங்குள்ள இறைவன் - மறைக்காட்டுநாதர், வேதாரண்யேஸ்வரர்; இறைவி - யாழினும் இனிய மொழியாள், வேதநாயகி. அப்பரும் சம்பந்தரும் தங்கள் பாடல் களின் மூலம், கதவை திறந்தும், மூடியும் காட்டிய திருத்தலம். இத்தல ஈசன் ‘புவன விடங்கர்.’ இவர் ஆடிய நடனம் ‘அம்சபாத நடனம்.’ அன்னப்பறவை அடியெடுத்து வைப்பது போன்றது இந்த நடனம். இங்குள்ள மணிகர்ணிகை தீர்த்தம் மற்றும் ஆதி சேது கடல் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து வகை பாவங்களும் விலகி, புண்ணியம் வந்து சேரும். மன அமைதி, தொழில் விருத்தி, வேலைவாய்ப்பு ஆகிய வரங்களைப் பெற இங்குள்ள இறைவனை தரிசிக்கலாம்.
Tags:    

Similar News