செய்திகள்
பிரதமர் மோடி

நாட்டின் நலனுக்காக உழைக்கும் கட்சி பாஜக மட்டுமே - பிரதமர் மோடி

Published On 2021-11-25 18:23 GMT   |   Update On 2021-11-25 18:23 GMT
தேசிய அளவில் மட்டுமின்றி உத்தர பிரதேசம் தற்போது சர்வதேச அளவிலும் முத்திரை பதிக்கிறது. இங்கு 5 சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ளன என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நொய்டா:

உத்தர பிரதேச மாநிலம் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் இந்தியாவில் 5 சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது.

புதிதாக அமையவுள்ள நொய்டா விமான நிலையம் டெல்லி தலைநகர் அருகே  இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக இருக்கும்.  இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெருக்கடி குறைவதற்கு உதவும்.

இந்த விமான நிலையத்தின் முதல்கட்டப் பணி ரூ.10,050 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. 1300-க்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்பில் முடிக்கப்பட உள்ள முதலாவது கட்ட விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 1.2 கோடி பயனாளிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இது 2024 வாக்கில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய பின் பேசியதாவது:

நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் தளவாட நுழைவாயிலாக செயல்படும். நொய்டா சர்வதேச விமான நிலையம் விமானங்களை பழுதுபார்க்கும் மிகப்பெரிய மையமாக இருக்கும். விமானத்தின் பராமரிப்பு பணிகள் இங்கு மேற்கொள்ளப்படும்.  
இங்குள்ள 40 ஏக்கர் நிலப்பரப்பில் விமானங்கள் பழுது மற்றும் மறுசீரமைப்பு செய்யப்படும்போது இங்கு உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

விமான போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ச்சி பெறுகிறது. உள்கட்டமைப்பு என்பது அரசியல் அல்ல. அது தேசிய கொள்கையின் ஒரு அங்கம். நாங்கள் எந்த திட்டத்திற்கும் இடையூறு ஏற்படுத்தவில்லை. அதனை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் அளித்தோம்.

முந்தைய அரசுகள் இருளில் வைத்திருந்த உ.பி., தற்போது தேசிய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் முத்திரை பதிக்கிறது. தற்போது சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தையும் உ.பி. ஈர்த்துள்ளது. இங்கு 5 சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ளன.

நமது நாட்டில் சில கட்சிகள் சுயநலனுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. அவர்களின் நலன், குடும்ப நலனைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். நாங்கள் நாட்டின் நலனுக்காக உழைக்கிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News