லைஃப்ஸ்டைல்
மன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த வழிகள்...

மன அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த வழிகள்...

Published On 2021-07-19 06:29 GMT   |   Update On 2021-07-19 06:29 GMT
வெளியே செல்ல முடியாத சூழலில் இயற்கையோடு இணைவதும், பறவைகளை கவனிப்பதும் பல்வேறு வகைகளில் மன நலத்துக்கு நன்மைகளை பெற்றுத்தரும் என்கிறார்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள்.
ஊரடங்கு காலத்தில் வெளி இடங்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் வீட்டில் இருந்த படியே விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். வீட்டு பால்கனியில் அமர்ந்தபடி இயற்கையை ரசிப்பவர்களின் கண்களில் கட்டாயம் பறவைகள் தென்படும். அத்தகைய பறவைகளை அடையாளம் காணவும், அவற்றை பற்றி தெரிந்துகொள்ளவும் பலர் முயற்சிக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில்தான் பறவைகளை ரசித்து பார்ப்பதை பிரதானமான பொழுதுபோக்காக பின்பற்றுகிறார்கள். அந்த கலாசாரத்தை இந்தியாவின் பல நகரங்களில் வசிக்கும் மக்கள் கடைப்பிடிக்கத்தொடங்கி இருக்கிறார்கள். வெளியே செல்ல முடியாத சூழலில் இயற்கையோடு இணைவதும், பறவைகளை கவனிப்பதும் பல்வேறு வகைகளில் மன நலத்துக்கு நன்மைகளை பெற்றுத்தரும் என்கிறார்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள்.

ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு பலர் இயற்கையுடன் இணைவதற்கான வழிகளை தேடுகிறார்கள். அவர்களின் பொழுது போக்கு பட்டியலில் பறவைகளும் இடம் பிடித்திருக்கிறது. தொலைநோக்கிகள் மூலமோ அல்லது தொலைநோக்கிகள் இல்லாமலோ பறவைகளை பார்ப்பது, அவற்றின் ஒலியை கேட்பதன் மூலம் மனதை இலகுவாக்கலாம். "ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை தரும் இன்பமான காரியங்களை செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி செய்யும்போது மூளையில் எண்டோர்பின்ஸ் மற்றும் டோபமைன் போன்ற ரசாயனங்கள் வெளியிட தூண்டுகோலாக அமையும். மன அழுத்தத்தை குறைப்பதற்கும் வழிவகை செய்யும். பறவைகளை ரசிக்கும் செயலில் ஈடுபடும்போது மூளையில் ஒரு வகையான இனிமையான உணர்வை அனுபவிக்க முடியும்’’ என்கிறார், பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மன நல மருத்துவ உதவி பேராசிரியர் சவ்ரப் குமார்.

பறவைகளை பார்த்து ரசிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்பது குறித்து பார்ப்போமா?

உடற்பயிற்சி: இன்றைய காலகட்டத்தில் உடல் இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் குறைந்து கொண்டிருக்கின்றன. பலரும் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே வாழ்க்கை முறையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். பறவைகளை கண்காணிப்பது என்பது உடல் ரீதியான உடற்பயிற்சியை உள்ளடக்கிய ஒரு செயலாக பார்க்கப்படுகிறது.

மூளைக்கு பயிற்சி: பொழுதை போக்குவதற்கு செலவிடும் நேரத்தில் பறவைகளைப் பார்ப்பது அன்னிச்சை உணர்வுகளை தூண்டக்கூடும். மூளைக்கும் இதமளிக்கும். அதிக செறிவுடன் செயலாற்ற தூண்டுகோலாக அமையும்.

காட்சியில் மாற்றம்: தினமும் ஒரு மணி நேரத்தை பறவை கண்காணிப்புக்கு செலவிடுவது விமானத்தில் பறப்பது போன்ற உணர்வை கொடுக்கும். ஆகாயத்தில் மிதக்கும் தருணத்தை அனு பவிப்பதுபோல் உள்ளுணர்வு குதூகலிக்கும். கவலை, சலிப்பு போன்ற உணர்வுகளுக்கு வடிகாலாக அமையும். மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மன அழுத்தம் குறையும்: நவீன வாழ்க்கை முறை மின்னணு சாதனங்களை சார்ந்தே அமைந்திருக்கிறது. கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பால் ஆன்லைன் வழியாகவே பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப் படுகின்றன. கணினி, லேப்டாப் திரை முன்பு செலவிடும் நேரமும் அதிகரித்திருக்கிறது. வேலை முடிந்த பிறகு ஓய்வு நேரத்தின் பெரும் பகுதியை செல்போன் ஆக்கிரமித்துக்கொள்கிறது. இப்படி திரை முன்பு செலவிடும் நேரம் அதிகரிப்பது மன அழுத்தத்தை உண்டாக்கிவிடும்.

இந்த சூழலில் சில நிமிடங்களையாவது பறவைகளை பார்ப்பதற்கு ஒதுக்குவது இயற்கையோடு இணைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மன அழுத்தத்தை வெளியிடவும் உதவும். வெளியே செல்ல முடியாவிட்டாலும் பால்கனியில் இருந்தபடி பறவைகளை பார்ப்பதும், புதிய காற்றை நுகர்வதும் மனச்சோர்வை குறைக்கும். மகிழ்ச்சியை உணர வைக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ‘‘நடைப்பயிற்சி, பறவைகள் பார்ப்பது, பிற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்’’ என்றும் டாக்டர் சவ்ரப் குமார் கூறுகிறார்.

மன நிறைவு: கவலை, தேவையற்ற வதந்தி, மன அழுத்தம், சிந்தனை ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் நினைவாற்றல் நிறன் மேம்படும். பண்டைய காலம் முதல் பின்பற்றப்படும் யோகா, ஆயுர் வேதம் ஆகியவை நினைவாற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அந்த வகையில் பறவைகள் பார்ப்பதை பலரும் தியானத்துடன் ஒப்பிடுகிறார்கள். பறவைகளின் அசைவுகளையும், வடிவங்களையும் ரசித்து பார்ப்பது மன நிறைவை அளிப்பதாகவும் கூறுகிறார்கள்.
Tags:    

Similar News