வழிபாடு
சாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களைக் காணலாம்.

மகா சிவராத்திரியையொட்டி சுந்தரேசுவரர் -மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை

Published On 2022-03-02 03:16 GMT   |   Update On 2022-03-02 03:16 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை யொட்டி சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. கோவிலில் இரவு முழுவதும் நடந்த கலை நிகழ்ச்சியில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று இரவு சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று இரவு முதல் கோவில் திறக்கப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் இன்று காலை வரை நடந்தது.

இதற்காக பக்தர்கள் அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், பன்னீர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன், மஞ்சள் பொடி, நெய், எண்ணெய் என அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை நேற்று மாலை வரை கோவில் உள்துறை அலுவலகத்தில் வழங்கினர். தொடர்ந்து இரவு 10 மணி முதல் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி 4 கால அபிஷேக பூஜைகள் நடந்தது.

விழாவில் சுந்தரேசுவரர் சுவாமி 1008 சங்காபிஷேகமும், மீனாட்சிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் அர்ச்சனை பொருட்களுடன் இரவு முழுவதும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு சுவாமியை தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு நேற்று சாமிக்கு அர்ச்சனை செய்ய பொருட்கள் அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த ஆண்டு புதுமையாக கோவிலில் அரசு உத்தரவுப்படி இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் மாலை 6 மணிக்கு ஆன்மிக சொல்லரங்கமும், இரவு 7 மணிக்கு சலங்கை நடனம், 8 மணிக்கு பக்தி இன்னிசை, 9 மணிக்கு நடனம், 10 மணிக்கு வீணை கச்சேரி, 11 மணிக்கு மேல் நடனம், பரதநாட்டியம், நள்ளிரவு 1 மணிக்கு தேவாரம், 2 மணியில் இருந்து 4 மணி வரை பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

இதேபோன்று மதுரையை சுற்றியுள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இரவு முழுதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில், மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த பழைய சொக்கநாதர் கோவில், முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் என அனைத்து சிவன் கோவில்களிலும் சுவாமிக்கு 4 கால பூஜைகள் நடந்தன. 1008 சங்காபிஷேகம் நடந்தது.

இதுதவிர நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் குலதெய்வ வழிபாடும் நடந்தது. வடக்குகோபுரம் முனியாண்டி, கிழக்கு பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவிலில் இரவு பக்தர்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து பூஜை செய்தனர்.

நகரில் இரவு முழுவதும் பொதுமக்கள், பக்தர்கள் கோவிலுக்கு சென்று வந்ததால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News