ஆன்மிகம்
முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்

அரசு வழிகாட்டுதல்படி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்

Published On 2020-11-19 06:45 GMT   |   Update On 2020-11-19 06:45 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் அரசு வழிகாட்டுதல்படி சூரசம்ஹாரம் நடத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
குமரி மாவட்டத்தில் உள்ள மருங்கூர் திருமலை சுப்பிரமணியசாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், தோவாளை சொக்கர் கிரி முருகன் கோவில், குமாரகோவில் வெள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில், கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல் முருகன் கோவில் உள்பட பல முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருவிழாவான நாளை (வெள்ளிக்கிழமை) சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சூரசம்ஹார நிகழ்ச்சி எவ்வாறு நடத்துவது? என்பது குறித்த ஆலோசனை கூட்டம் அறங்காவலர் குழு சார்பில் சுசீந்திரத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அழகேசன், சதாசிவம், சந்துரு என்ற ஜெயசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நாளை சூரசம்ஹார நிகழ்ச்சியை கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவில் வளாகத்துக்கு உள்ளே நடத்துவது என்றும், சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து வரும் குறைந்தளவு பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

குமரி மாவட்ட கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது. இதில் கோட்டாட்சியர் மயில் தலைமை தாங்கினார். இதில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சூரசம்ஹார நிகழ்வு நடக்க இருக்கும் கோவில்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது கோட்டாட்சியர் மயில் கூறுகையில், விழா நடக்கும் கோவில்களில் ஏற்கனவே அரசும், மாவட்ட நிர்வாகமும் அறிவித்தபடி நோய் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக கோவில் வளாகத்திற்குள் தான் சூரசம்ஹார நிகழ்ச்சி நடத்த வேண்டும். அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றார்

அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் பேசுகையில், அரசு ஏற்கனவே கோவில்களில் நடக்கும் விழாக்களுக்கு 100 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கி உள்ளது. தற்போது 50 பேர் மட்டுமே அனுமதி என்பது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. சூரசம்ஹார நிகழ்ச்சி கோவிலுக்கு வெளியே நடத்த வசதியாக இருக்கும். மற்ற கட்டுப்பாடுகளை நாங்கள் கடைபிடிக்கிறோம் என கூறினார்கள்.

இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும், கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. முடிவில் அதிகாரிகளின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி கூறினர்.
Tags:    

Similar News