செய்திகள்
கோப்புப்படம்.

கால்நடைகள் தீவனத்திற்காக குதிரை மசால் சாகுபடி

Published On 2021-07-16 08:46 GMT   |   Update On 2021-07-16 08:46 GMT
குதிரை மசால் சாகுபடியில் ஏக்கருக்கு 7-8 கிலோ விதை தூவி, வாரம் ஒரு முறை நேரடி பாசனம் செய்யப்படுகிறது.
குடிமங்கலம்:

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பால் உற்பத்திக்காக அதிகளவு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. மாடுகளின் தீவனத்தேவையை பசுந்தீவனம், உலர் தீவனம், புண்ணாக்கு என சரிவிகிதமாக பிரித்து அளிக்கின்றனர்.

மேய்ச்சலுக்கு அழைத்து செல்லப்படாத மாடுகளின் பசுந்தீவன தேவைக்காக விளைநிலங்களில் பல வகை சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
இதில் நேப்பியர் ரக புல் தற்போது பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

இதே போல் முன்பு குதிரை மசால் சாகுபடி பரவலாக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களால் குதிரை மசால் சாகுபடி குறைந்து, தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

குதிரை மசால் சாகுபடியில் ஏக்கருக்கு 7-8 கிலோ விதை தூவி, வாரம் ஒரு முறை நேரடி பாசனம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் உரமிட்டு செடி பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம்.

சுழற்சி முறையில் அறுவடை செய்வதால் தீவன தட்டுப்பாடு ஏற்படாது. அதிக பரப்பில்  சாகுபடி செய்தால் அறுவடை செய்து கட்டுகளாக கட்டி  நகரப்பகுதியில் விற்பனை செய்யலாம்.

ஆனால் இத்தகைய பசுந்தீவன உற்பத்திக்கான விதைகள், கரணைகள் போதியளவு கிடைப்பதில்லை.
பால் உற்பத்தியை அதிகரிப்பதில் பசுந்தீவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முன்பு கால்நடைத்துறை சார்பில் பசுந்தீவன உற்பத்திக்கான விதை, இடுபொருட்கள் வினியோகிக்கப்பட்டு சாகுபடிக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. அத்திட்டத்தை மீண்டும் பருவமழை சீசனில் செயல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
Tags:    

Similar News