உள்ளூர் செய்திகள்
தமிழ்நாட்டில் 5 இடங்களில் சிறப்பு வார்டுகள் திறப்பு

ஒமிக்ரான் நோயாளிகளுக்காக தமிழ்நாட்டில் 5 இடங்களில் சிறப்பு வார்டுகள் திறப்பு

Published On 2021-12-03 06:07 GMT   |   Update On 2021-12-03 06:07 GMT
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் உள்ள விமான நிலையங்களுக்கு வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்வதால் இந்த 4 விமான நிலையங்களிலும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு பயணிகளை தீவிர மருத்துவ பரிசோதனை செய்த பிறகே வீட்டுக்கு அனுமதிக்கின்றனர்.

சென்னை:

கொரோனாவில் இருந்து உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று தென் ஆப்பிரிக்காவில் தோன்றி பிற உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

புதிதாக உருவெடுத்துள்ள ஒமிக்ரான், கொரோனா தொற்றை காட்டிலும் 5 மடங்கு வேகமாக பரவக் கூடியதாகவும், வீரிய மிக்கதாகவும் உள்ளதால் அதை எதிர்கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்து உள்ளது. மற்ற நாடுகள் வெளிநாடுகளில் இருந்து பயணிகளை தீவிர பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் உள்ள விமான நிலையங்களுக்கு வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்வதால் இந்த 4 விமான நிலையங்களிலும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு வெளிநாட்டு பயணிகளை தீவிர மருத்துவ பரிசோதனை செய்த பிறகே வீட்டுக்கு அனுமதிக்கின்றனர்.

அதுவும் முதல் 7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன் பிறகு மீண்டும் பரிசோதனை செய்து பார்த்து 7 நாள் கூடுதலாக தனிமைப்படுப்படுகிறார்கள். இவர்களை உள்ளாட்சி அமைப்பின் மருத்துவ குழுவும் அவ்வப்போது வந்து கண்காணிக்கும்.

இது பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-


தமிழ்நாட்டில் இன்னும் ஒமிக்ரான் பரவவில்லை. அதை தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பா உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளை முழு மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தி வருகிறோம். விமான நிலையத்தில் யாருக்காவது பாசிட்டிவ் என தெரிய வந்தால் உடனடியாக ஆஸ் பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.இதற்காக தமிழ்நாட்டில் 5 ஆஸ்பத்திரிகளில் ‘ஒமிக்ரான்’ நோயாளிகளுக்காக சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஸ்பத்திரி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, கோவை மருத்துவ கல்லூரி அரசு ஆஸ்பத்திரி, திருச்சி அரசு கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் ‘ஸ்பெ‌ஷல்’ வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனவே மக்கள் பீதி அடைய வேண்டாம். அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்...தென்ஆப்பரிக்கா உள்பட வெளிநாடுகளில் இருந்து மும்பை வந்தவர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை

Tags:    

Similar News