செய்திகள்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசு - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

Published On 2021-08-16 09:48 GMT   |   Update On 2021-08-16 09:48 GMT
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக டி.என்.பி.எல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு அந்த அணி 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

சென்னை:

டி.என்.பி.எல். (தமிழ்நாடு பிரிமீயர் லீக்) 20 ஓவர் போட்டியில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப் புக்கு 183 ரன் குவித்தது.

தொடக்க வீரர் ஜெகதீசன் அபாரமாக ஆடி 58 பந்தில் 90 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரியும், 2 சிக்சரும் அடங்கும். கேப்டன் கவுசிக் காந்தி 19 பந்தில் 26 ரன் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ரஹில் ஷா, பொய்யாமொழி தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 ரன்னில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

சரவணக்குமார் 25 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), அமித் சாத்விக் 16 பந்தில் 36 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். சோனு யாதவ் 2 விக்கெட்டும், ஆர்.சதீஷ், சாய்கிஷோர் அருண், அலெக்சாண்டர், ஹரிஷ் குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் திருச்சி அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் சாய் கிஷோர் அபாரமாக பந்துவீசி 4 ரன்களே விட்டுக்கொடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக டி.என்.பி.எல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு அந்த அணி 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

சாம்பியன் பட்டம் பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 2-ம் இடத்தை பிடித்த திருச்சி வாரியர்ஸ் அணிக்கு ரூ. 30 லட்சம் கிடைத்தது.

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

ஆட்ட நாயகன் விருது ஜெகதீசனுக்கு கிடைத்தது. தொடர்நாயகன் விருதை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ஹரி நிஷாந்த் தட்டிச் சென்றார். 

Tags:    

Similar News