இஸ்லாம்
நாகூர் தர்கா

நாகூர் தர்காவில் கந்தூரி விழா ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2021-12-24 04:21 GMT   |   Update On 2021-12-24 04:21 GMT
நாகூர் தர்காவில் 4-ந் தேதி கொடியேற்றம் நிகழ்வும், 13-ந் தேதி சந்தனக்கூடு ஊர்வலமும், 14-ந் தேதி நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது
நாகை மாவட்டம் நாகூரில் உலகப்புகழ்பெற்ற தர்கா உள்ளது. இங்கு கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கந்தூரி விழா வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றம் நிகழ்வும், 13-ந் தேதி (வியாழக்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலமும், 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் நாகூர் வருவார்கள்.

இந்த நிலையில் நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கொடி மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம் செல்லும் இடங்களை பார்வையிட்டனர். மேலும் விழா நாட்களில் தர்காவிற்கு வருபவர்களுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தர்கா நிர்வாக அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆண்டவர் சமாதி, தலைமாட்டு வாசல், கால்மாட்டு வாசல், தர்கா குளம், அலங்கார வாசல், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

விழா காலங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என கலெக்டர், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆய்வின்போது நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தர்கா நிர்வாக மேலாளர் ஜெகபர்உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News