செய்திகள்
கோப்புபடம்

சேலத்தில் தி.மு.க.வினர் சாலைமறியல் - 40 பேர் கைது

Published On 2020-11-21 08:43 GMT   |   Update On 2020-11-21 08:43 GMT
உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து சேலத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக அவர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளைக்கு நேற்று சென்றார். ஆனால் அங்கு அனுமதியின்றி பிரசாரம் மேற்கொள்ள முயன்றதாக கூறி உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று இரவு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்திற்கு மன்ற மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் கோஷமிடப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ராஜ்குமார், மாவட்ட துணைத்தலைவர் மேகநாதன், மாநகர செயலாளர் கிரிதரன், தாரமங்கலம் ஒன்றிய தலைவர் ஸ்ரீனிவாஸ் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் வேனில் ஏற்றி டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News