ஆன்மிகம்
குருவித்துறை திருத்தலம்

குருவின் மகனை மீட்டுத் தந்த குருவித்துறை திருத்தலம்

Published On 2021-11-12 01:35 GMT   |   Update On 2021-11-12 01:35 GMT
வரும் நவம்பர் 13-ம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த நன்னாளில் குருவித்துறை யோக குருவை தியானித்து அருள்பெறுவோம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ளது, குருவித்துறை என்ற திருத்தலம். இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாக வீற்றிருந்து காட்சி தருகின்றனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி யுத்தம் நடைபெறுவது வாடிக்கை. அதுபோன்ற காலத்தில் எல்லாம் இரு பக்கங்களிலும் பலர் உயிரிழப்பார்கள்.

அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ‘மிருத சஞ்சீவினி’ என்ற மந்திரத்தை கற்றறிந்திருந்தார். இதனால் தன் பக்கம் உயிரிழந்த அசுரர்களை எல்லாம், அந்த மந்திரத்தை உச்சரித்து உயிர்ப்பித்து விடுவார் சுக்ராச்சாரியார். இதனால் அசுரர்களின் பலம் கூடிக்கொண்டே இருந்தது. தேவர்களின் படையோ குறைந்து கொண்டே இருந்தது.

இதையடுத்து சுக்ராச்சாரியாரிடம் இருந்து ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையில் இருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் கல்வி கற்பதற்காக அனுப்ப முடிவு செய்தனர். அப்படி கல்வி கற்கும்போது, ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் யோசனையாக இருந்தது. இதற்காக தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன் தேர்வு செய்யப்பட்டான்.

சுக்ராச்சாரியாரிடம் சென்ற கசன், அவரிடம் கல்வி கற்றபடியே அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். சுக்ராச்சாரியாரிடம் கல்வி கற்க வந்த கசன், தேவ குலத்தைச் சேர்ந்தவன் என்பதை அசுரர்கள் அறிந்தனர். மேலும் கசன், ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை கற்கவே இங்கு வந்திருப்பதையும் அவர்கள் தெரிந்துகொண்டனர். எனவே கசனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்து விட்டனர்.

கசனைக் காணாத தேவயானி, தந்தையான சுக்ராச்சாரியாரிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். இதற்கிடையில் மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந்து மீட்டு வர அருளும்படி, இத்தலப் பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார். இதனாலும் இது குரு தலமாக கருதப்படுகிறது. இங்கு வழிபட்டாலும் குருவால் கிடைக்கும் நன்மைகள் பல நம்மை வந்தடையும்.

வியாழன் என்று அழைக்கப்படும் குரு பகவான், நவகிரக வரிசையில் முக்கியமானவர். இவரை வணங்கினால் ஞானம், செல்வம் முதலானவற்றை அடையலாம். 'குரு' என்றால், 'இருளை நீக்குபவர்' என்று பொருள். அதாவது, நம்மிடம் இருந்து வரும் அறியாமையாகிய இருளை நீக்குபவர். பொதுவாக, சிவாலயங்களில் குரு பகவான் எழுந்தருளி இருப்பது சாதாரணமாகப் பார்க்கக் கூடிய ஒன்று. ஆனால், வைணவத் தலம் ஒன்றில் குருபகவான் எழுந்தருளி இருப்பது, சற்று வித்தியாசமானதுதான்.

மூன்று பிராகாரங்களைக் கொண்ட விரிவான இந்தக் கோயில், வைகைக் கரையில் அமைந்துள்ளது. பெருமாளை தரிசனம் செய்யச் செல்வதற்கு முன் வெளியே குரு பகவானின் திருச்சந்நிதி. பெருமாள் கிழக்கு நோக்கிக் காட்சி தர, அவரை தரிசிக்கும் கோலத்தில் மேற்கு நோக்கிக் காணப்படுகிறார் குரு. இவருக்கு அருகே ஸ்ரீசக்கரத்தாழ்வார் எழுந்தருளியிருக்கிறார். இங்கே குரு பகவான், யோக குருவாகக் காட்சிகொடுக்கிறார். கைகளை நெஞ்சில் குவித்து வணங்கும் பாவனையில் காட்சி தருகிறார்.

Tags:    

Similar News