செய்திகள்
மதுரை ஐகோர்ட்

மேலவளவு கொலை வழக்கு- விடுதலையான 13 பேரும் கிராமத்திற்குள் நுழைய நீதிமன்றம் தடை

Published On 2019-11-27 16:00 GMT   |   Update On 2019-11-27 16:03 GMT
மேலவளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் கிராமத்திற்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரை மாவட்டம், மேலவளவு கிராமத்தில் 1997-ம் ஆண்டு பஞ்சாயத்து தலைவர் உள்பட 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகள் உறுதி செய்தன.

இதற்கிடையே, இந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த 13 பேர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பான அரசாணை நகல் கேட்டு மூத்த வக்கீல் ரத்தினம், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த ஐகோர்ட்டு, அரசாணையையும், வழக்கு ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் தினேஷ்பாபு ஆஜராகி 13 பேர் விடுதலை தொடர்பான அரசாணை மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தார்.

அப்போது மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, சூப்பிரண்டு ஊர்மிளா ஆகியோரும் ஐகோர்ட்டில் ஆஜரானார்கள். பின்னர் நீதிபதிகள் மேலவளவு கொலை கைதிகள் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்? என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து இதுபற்றிய வழக்கு விசாரணையின் போது 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. மேலும் விடுதலை செய்யப்பட்ட 13 பேரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மேலவளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர்கள் 13 பேரும் பாஸ்போர்ட் வைத்திருந்தால், அவற்றை மதுரை எஸ்.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இதனுடன், வேலூரில் தங்கும் முகவரி, மொபைல் எண்களை வேலூர், மதுரை எஸ்.பி.க்களுக்கு 13 பேரும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News