உள்ளூர் செய்திகள்
பொதுமக்கள் மறியல்

கோவை அன்னூரில் பொதுமக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-01-11 11:10 GMT   |   Update On 2022-01-11 11:10 GMT
கோவை அன்னூரில் விசாரணைக்கு அழைத்து சென்ற என்ஜினீயர் வரவில்லை என்று கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்
கோவை:

கோவை அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையத்தை சேர்ந்தவர் ஓதிசாமி (வயது 37). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் கொங்கு இளைஞர் பேரவையில் நிர்வாகியாக உள்ளார். 

இவருக்கும், பெருந் துறையை சேர்ந்த நபருக்கும் சிப்காட்டில் இடம் வாங்குவது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சுப்பிரமணி ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நேற்று மதியம் 3 மணியளவில் பெருந்துறை போலீசார் 3 பேர் சாதாரண உடையில் கோவைக்கு வந்தனர். 

பின்னர் அவர்கள் ஓதிசாமியை விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் அழைத்து சென்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் கொங்கு இளைஞர் பேரவையினர் அன்னூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஓதிசாமி குறித்து கேட்டனர். அதற்கு போலீசார் நாங்கள் யாரையும் விசாரணைக்கு அழைத்து வரவில்லை என கூறினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. 

போலீஸ் நிலையம் முன்பு கொங்கு இளைஞர் பேரவையினர், கிராம மக்கள் ஆகியோர் திரண்டனர். அவர்கள் ஓதிசாமி எங்கு உள்ளார் என்று எங்களுக்கு தெரிய வேண்டும் என்று கூறி கோவை-சத்தி ரோட்டில் 75-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அன்னூர் போலீசார் ஓதிசாமி எங்கு உள்ளார் என்று விசாரித்தனர். அப்போது அவரை பெருந்துறை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றது தெரிய வந்தது.  இது குறித்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் உடனடியாக ஓதிசாமியை இங்கு அழைத்து வரவேண்டும் என்று கூறினார். 

இதனையடுத்து அன்னூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர். மறியல் காரணமாக கோவை& சத்தி ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விசாரணை முடிந்ததும் விசாரணைக்கு அழைத்து சென்ற ஓதிசாமியை பெருந்துறை போலீசார் விடுவித்தனர். 
Tags:    

Similar News