உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி

போகி பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-01-11 09:08 GMT   |   Update On 2022-01-11 09:08 GMT
போகி திருநாளில் பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து, நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு காஞ்சிபுரம் கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பது வருமாறு:-

அறுவடை திருநாளை, தமிழர்கள் பொங்கல் திருநாளாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகையாக "பழையன கழிதலும், புதியன புகுதலுமாக" கொண்டாடி வருவது வழக்கம்.

இந்நாளில் தமிழர்கள், தைத்திருமகளை வரவேற்கும் வகையில் தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளை திருஷ்டிக்காக எரிப்பதும் வீடுகளை சுத்தம் செய்து கோலமிட்டு கொண்டாடுவதும் வழக்கம். போகி அன்று, பழைய சிந்தனைகளையும், செயல்களையும் தவிர்த்து, புதிய சிந்தனைகள் மற்றும் செயல் திட்டங்களை துவக்க வேண்டும் என்ற நோக்கில், 'பழையன கழிதலும். புதியன புகுதலுமென' நம் தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இப்போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.

பழைய பொருட்களை எரிப்பதால் நச்சுப்புகையும், நுண்துகள்களும் வெளியேற்றப்பட்டு அடர்த்தியான புகை மூட்டம் ஏற்படுகிறது. இவை காற்று வாயு மண்டலத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பதால் பார்க்கும் திறன் குறைக்கபபட்டு ஆகாயம், சாலை மற்றும் ரெயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இத்தகைய புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளன. இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சட்டப்படி குற்றமாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு (15) ன்படி இது தண்டனைக்குரியதாகும்.

எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று போகித் திருநாளில், நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து, நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News