செய்திகள்
ரோப்கார்

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் தீவிரம்

Published On 2019-09-10 08:34 GMT   |   Update On 2019-09-10 08:34 GMT
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணி முடிவதில் கூடுதலாக 5 நாட்கள் வரை ஆகும் என்று கோவில் அதிகாரி தெரிவித்தார்.

பழனி:

பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார், மின்இழுவை ரெயில் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இவற்றில் பக்தர்கள் பெரிதும் விரும்புவது ரோப்கார் சேவையே. இந்த ரோப்கார் நிலையத்தில் தினசரி ஒரு மணி நேரம் மற்றும் மாத, ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி கடந்த ஜூலை மாதம் 29-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து பராமரிப்பு பணியை 45 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு முழுவீச்சில் பணிகள் நடந்து வந்தன.

அதன்படி வடத்தின் (ரோப்) தன்மை, அடிவாரம் மற்றும் மலைப்பகுதி நிலையத்தில் உள்ள பற்சக்கரங்கள், ‘சாப்ட்’கள் மற்றும் இதர உதிரி பாகங்களின் உறுதி தன்மை சோதிக்கப்பட்டன, பெட்டிகளும் சரிசெய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டன. இந்நிலையில் ரோப்காரில் உள்ள ‘சாப்ட்’கள் தேய்மானம் அடைந்திருந்ததால், அவை அகற்றப்பட்டு புதிய ‘சாப்ட்’கள் பொருத்தப்பட முடிவு செய்யப்பட்டது.

இந்த ‘சாப்ட்’கள் மும்பையில் இருந்து வர இருக்கிறது. அவை பழனிக்கு வர தாமதமாகி உள்ளது. இதைத்தொடர்ந்து பராமரிப்பு பணி திட்டமிட்டபடி 45 நாட்களுக்குள் முடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ‘சாப்ட்’கள் வந்த பின்னர் அவை பொருத்தப்பட்டு, பணிகள் முடிவடையும். அதையடுத்து ரோப்கார் சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஆகவே பராமரிப்பு பணி முடிவதில் கூடுதலாக 5 நாட்கள் வரை ஆகும் என்று கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News