ஆன்மிகம்
சிவனடியாருக்காக மனைவியை துறக்கத் துணிந்த நாயனார்

சிவனடியாருக்காக மனைவியை துறக்கத் துணிந்த நாயனார்

Published On 2021-01-07 08:38 GMT   |   Update On 2021-01-07 08:38 GMT
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் தொழில் புரிந்து சிறப்புற்று வாழ்ந்து வந்தவர், இயற்பகையார். இவருக்கு சிறுவயது முதலே சிவபெருமானின் மீது அதீத பக்தி இருந்தது.
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் தொழில் புரிந்து சிறப்புற்று வாழ்ந்து வந்தவர், இயற்பகையார். இவருக்கு சிறுவயது முதலே சிவபெருமானின் மீது அதீத பக்தி இருந்தது. அதன்காரணமாக சிவபெருமானின் அடியார்கள் மீதும் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். சிவனடியார்கள், எது வேண்டுமென்று கேட்டாலும் அதை இல்லை என்று சொல்லாமல் வழங்கும் சிறப்பு மிக்கவராக இயற்பகையார் திகழ்ந்தார்.

அவரது பக்தியின் ஆழத்தையும், இறைநெறியையும் உலகுக்கு உணர்த்த எண்ணினார், சிவபெருமான். அதன்படி தன்னை ஒரு சிவனடியாராக மாற்றிக்கொண்ட ஈசன், இயற்பகையாரின் இல்லம் முன்பாக வந்து நின்றார். சிவனடியாரைப் பார்த்ததும் உள்ளம் மகிழ்ந்துபோன இயற்பகையார், வாசலுக்கு வந்து அவரது பாதங்களை நீரால் கழுவி, வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பின்னர் அங்கே ஒரு உயா்ந்ததொரு ஆசனத்தை அளித்து அதில் சிவனடியாரை அமரச் செய்தார்.

தொடர்ந்து சிவனடியாரிடம், “சுவாமி.. இந்த அடியேன் உங்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நீங்கள் விரும்பியதைக் கேட்கலாம். அதை இல்லை என்று சொல்லாது நான் தருகிறேன்” என்றார்.

அதைக் கேட்டு சற்றே நகைப்பை உதிர்த்த அடியார் வேடத்தில் இருந்த சிவபெருமான், “நீ.. ஈசன் அடியவர் எது கேட்பினும், இல்லை என்று கூறாமல் வழங்குவாய் என்று கேள்விப்பட்டேன். ஆகையால்தான் உன் இருப்பிடம் தேடி வந்தேன். இருப்பினும் கேட்க சற்று தயக்கமாகவே உள்ளது” என்றார்.

“ஐயனே! எதுவாக இருப்பினும் தயங்காமல் கேளுங்கள். என்னிடம் இருக்கும் பொருள் எதுவுமே எனக்கு சொந்தமானது இல்லை. எல்லாம் ஈசன் தந்தது. ஆகையால் அதை இறைவனின் அடியவர் களுக்கே கொடுத்து ஆனந்தம் கொள்கிறேன். உங்களின் தேவையை தெரிவியுங்கள்” என்று கூறினார், இயற்பகையார்.

மறுநொடியே சிவனடியார் கேட்ட பொருளால், இயற்பகையாரின் மனைவிதான் பேரதிர்ச்சி அடைந்தார். ஆனால் இயற்பகையாரின் முகத்தின் புன்னகை மட்டுமே தவழ்ந்தது. அப்படி அந்த சிவனடியார் என்ன கேட்டார் என்கிறீர்களா?.. “உன்னுடைய அழகிய மனைவி எனக்கு வேண்டும். அவளை என்னுடன் அனுப்பி வை” இதுதான் சிவனடியார் கேட்ட யாசகம்.

இயற்பகையார் சொன்னார். “சுவாமி.. தாங்கள் என்னிடம் இல்லாத பொருளைக் கேட்டு, என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவீர்களோ என்று கவலை கொண்டிருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடைபெறாதது, எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தங்கள் விருப்பப்படியே, என் மனைவியை உங்களுடன் அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த தன் மனைவியிடம் சென்றவர், அவளிடம் அனைத்தையும் கூறினார். தன் கணவரின் இயல்பை நன்றாக அறிந்திருந்த காரணத்தால், அதிர்ச்சியில் இருந்து விரைவாக மீண்ட இயற்பகையாரின் மனைவி, சிவனடியாருடன் செல்ல சம்மதித்தார்.

இதையடுத்து சிவனடியார், இயற்பகையாரின் மனைவியை அழைத்துக் கொண்டு செல்ல முயன்றார். அப்போது திடீரென்று சற்றே தயங்கி நின்றார், சிவனடியார். இதைப் பார்த்ததும், “சுவாமி.. ஏன் நின்று விட்டீர்கள்? உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார், இயற்பகையார்.

அதற்கு அடியார் வேடத்தில் இருந்த ஈசன், “ஒன்றுமில்லை.. இந்த ஊரில் உன் உறவினர் அதிகம். நான் உன் மனைவியை அழைத்துச் செல்வதை அவர்கள் அறிந்தால், எனக்கு இடையூறு செய்யக்கூடும். எனவே இந்த ஊரின் எல்லை வரை எனக்கு காவலாக நீ வர வேண்டும்” என்றார்.

உடனே தன் வீட்டிற்குள் இருந்து வாள் ஒன்றையும், கேடயம் ஒன்றையும் எடுத்துக் கொண்டு சிவனடியாரின் முன்பாக பாதுகாவலாகச் சென்றார், இயற்பகையார். அவருக்குப் பின்னால் சிவனடியாரும், அதற்குப்பின்னால் இயற்பகையாரின் மனைவியும் சென்றனர்.

இதற்கிடையில் நடந்ததை கேள்விப்பட்டு, அவர்கள் செல்லும் வழியில் இயற்பகையாரின் உறவினர்களும், ஊர் மக்களும் கூடி வழிமறித்தனர். பின்னர் இயற்பகையாரைப் பார்த்து “முட்டாளே.. உன் அறிவு இப்படி மழுங்கிப்போனதே.. எவரும் செய்ய அஞ்சும் காரியத்தைச் செய்து, ஊருக்கும், உறவினர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தப் பார்க்கிறாயா?. மரியாதையாக உன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் போ” என்று எச்சரித்தனர்.

“என் பக்திக்குரிய அடியவரை தடுக்க முயன்றால், உங்களை கொல்லவும் தயங்க மாட்டேன்” என்று கூறியதோடு, தடுக்க வந்த அனைவரையும் வாளால் வெட்டி வீழ்த்தினார், இயற்பகையார். பலரும் உயிர் தப்பினால் போதும் என்று ஓடினார்கள். எதிர்த்தவர்கள் இயற்பகையாரின் வாளுக்கு இரையானார்கள். எதிர்த்தவர்களை கொன்று விட்டு திரும்பிப் பார்த்தால், சிவனடியாரைக் காணவில்லை.

அப்போது விண்ணில் இருந்து பேரொளி உண்டானது. அதில் இருந்து சிவபெருமானின் குரல் அசரீரியாக ஒலித்தது. “இயற்பகையாரே! யாமே.. உம்மை சோதிப்பதற்காக வந்தோம். ஊரார் என்னை காமாந்தகாரன் என்று வசைபாடினர். நீரோ உலக மாந்தரின் இயல்பான சுபாவங்களையெல்லாம் உதறி யெறிந்து, உமது கொள்கையில் உறுதியாக நின்றீர். சிவனடியாரை உபசரிக்கும் உமது பண்பு இந்த உலகம் கண்டு வியக்கக்கூடியது. அதை அனைவருக்கும் உணர்த்தவே நாம் வந்தோம்” என்றது அந்தக் குரல்.

இயற்பகையார் மெய்சிலிர்த்து நின்றார். அவர் மீதும், அவர் மனைவி மீதும் விண்ணவர் பூமாரி பொழிந்தனர். சிவனடி சேர்ந்து அவ்விருவரும் அரிதிலும் அரிதான பாக்கியம் பெற்றனர். அவர்களுடன், இயற்பகையாரின் வாளுக்கு பலியானவர்களும் சிவலோகம் சென்றனர்.

Tags:    

Similar News