செய்திகள்
போராட்டம்

புதிய வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல்

Published On 2020-09-25 07:36 GMT   |   Update On 2020-09-25 07:36 GMT
புதிய வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேளாண் சட்ட நகலை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தஞ்சாவூர்:

புதிய 3 வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இன்று தஞ்சை புதிய பஸ் நிலையம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் அனைத்து விவசாய சங்கங்கள், சி.பி.ஐ., சி.ஐ.டி.யூ., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் என்.வி.கண்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர். திடீரென அவர்கள் வேளாண் சட்ட நகலை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் போராட்டகாரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது இருவருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேப்போல் வல்லம், செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்ட நகல் எரிப்பு, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயம் சங்கம் சார்பில் மாநில செயலாளர் பழனிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட 15 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News