விளையாட்டு
ஹர்திக் பாண்ட்யா

அகமதாபாத் அணியில் ஹர்திக் பாண்ட்யா, ரஷீத் கானுக்கு வாய்ப்பு

Published On 2022-01-18 10:27 GMT   |   Update On 2022-01-18 10:27 GMT
ஏலத்திற்கு முன்னதாக மூன்று வீரர்களைத் தேர்வு செய்துள்ள நிலையில், அகமதாபாத் அணி 53 கோடி ரூபாயுடன் ஏலத்தில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:

15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. 

இந்த போட்டிக்கான வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் பணி பழைய 8 அணிகளுக்கும் முடிந்துவிட்டது. 8 அணிகளிலும் 27 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர்.

புதிய அணிகளான அகமதாபாத், லக்னோ ஆகியவை வருகிற 22-ம் தேதிக்குள் அவர்கள் வாங்கி உள்ள வீரர்கள் விவரத்தை கொடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கெடு வித்திருந்தது. 

இந்த நிலையில் அகமதாபாத் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்ட்யா, ரஷீத் கான் ஆகியோரை தலா 15 கோடி ரூபாய்க்கும், சுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் ஹர்திக் பாண்ட்யா, ரஷீத் கான் ஆகியோரை தேர்ந்தெடுத்தது எதிர்பார்த்த ஒன்றாகும். 3வது வீரராக இஷான் கிஷனை அமதாபாத் அணி தேர்வு செய்யும் என்று கருதப்பட்ட நிலையில் சுப்மன் கில்லை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுப்மன்கில் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.

புதிய அணிகள் ஏலத்திற்கு முன்னதாக மூன்று வீரர்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது. எனவே, அகமதாபாத் அணி இந்த மூன்று வீரர்களையும் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இரண்டு அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கு தலா ரூ. 90 கோடி வரை செலவழிக்கலாம். அந்த வகையில், அகமதாபாத் அணி 53 கோடி ரூபாயுடன் ஏலத்தில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, கேரி கிர்ஸ்டன் ஆகியோர் அகமதாபாத் அணிக்கு பயிற்சியளிப்பார்கள்.
Tags:    

Similar News