செய்திகள்
தொட்டபெட்டா சாலை பெயர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.

தொட்டபெட்டாவில் மழையால் பெயர்ந்த சாலையை சீரமைப்பது எப்போது? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

Published On 2021-10-08 12:21 GMT   |   Update On 2021-10-08 12:21 GMT
மழையால் பெயர்ந்த தொட்டபெட்டா சாலையை சீரமைப்பது எப்போது? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக 4 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி முதல் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.

இதற்கிடையே ஊட்டி அருகே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் தொட்டபெட்டா மலைச்சிகரம் திறக்கப்படாமல் மூடிய நிலையிலேயே உள்ளது. தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து மலை சிகரத்துக்கு செல்லும் சாலை தொடர் மழையால் பெயர்ந்து விழுந்து உள்ளது. இதனால் சாலை அந்தரத்தில் தொங்குகிறது. இதன் காரணமாக தொட்டபெட்டா மூடப்பட்டு உள்ளது என்று சோதனைச் சாவடி அருகே தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் மற்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு தொட்டபெட்டா வருகிறவர்கள் சாலை மூடப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக சுற்றுலா வாகனங்கள் செல்லாததால் அந்த சாலையில் காட்டெருமை, கடமான் போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இருந்து நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம், குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு, மாவட்ட எல்லைகள், அடர்ந்த வனப்பகுதிகள், அணைகள் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம். அங்கு நிலவும் பனிமூட்டம் மற்றும் சீதோஷ்ண காலநிலையை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். இதனால் சாலையை சீரமைத்து, தொட்டபெட்டா செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையடுத்து மழையால் சேதமடைந்த தொட்டபெட்டா சாலையை சீரமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைத்து சாலையை சீரமைக்கவும், மழைநீர் செல்ல அடிப்பகுதியில் குழாய் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது வரை பணிகள் தொடங்கவில்லை. ஊரடங்கால் தொட்டபெட்டா மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வராததால் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது பிற சுற்றுலா தலங்கள் திறந்தும் தொட்டபெட்டா திறக்கப்படாததால் வருவாய் இழப்பு நீடித்து வருகிறது.
Tags:    

Similar News