செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஒரே நாளில் 73,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-10-11 11:54 GMT   |   Update On 2021-10-11 11:54 GMT
அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 4 சிறப்பு முகாம்களில் மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 321 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா வைரசின் 3-ம் அலை வராமல் தடுக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நேற்று 5-வது கட்டமாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதன்படி 5-வது கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 240 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 300 இடங்களிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

முகாமில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு தவணை நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுச்சென்றனர். சில முகாம்களில் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுச்சென்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடந்தது. முகாமினை பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவும், அரியலூர் மாவட்டத்தில் ரமணசரஸ்வதியும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 4 சிறப்பு முகாம்களில் மொத்தம் 80 ஆயிரத்து 93 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த 5-வது கட்ட சிறப்பு முகாமில் 24 ஆயிரத்து 176 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட 4 சிறப்பு முகாம்களில் மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 321 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நடந்த 5-வது கட்ட சிறப்பு முகாமில் 48 ஆயிரத்து 831 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர், பூலாம்பாடி, அரும்பாவூர், லெப்பைக்குடிகாடு ஆகிய 4 பேரூராட்சி பகுதிகளில் நேற்று நடந்த மாபெரும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சிறப்பு பரிசாக தலா ஒரு சில்வர் தட்டு வழங்கப்பட்டது.

அரியலூர் நகரில் நடந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆண்டிமடம் பகுதியில் ஆண்டிமடம், வரதராஜன்பேட்டை, அணிகுதிச்சான், இடையக்குறிச்சி, வாரியங்காவல், மருதூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 47 இடங்களில் வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி தலைமையில் சிறப்பு முகாம் நடந்தது. கூவத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 100 பேரில் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சேலை வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் ஒன்றியம் இறவாங்குடி, தழுதாழைமேடு, கொல்லாபுரம், மீன்சுருட்டி, பாப்பாக்குடி, வங்குடி ஆகிய கிராமங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
Tags:    

Similar News