ஆன்மிகம்
முருகன்

ஐப்பசி மாத சிறப்பு விரத வழிபாடுகள்

Published On 2020-11-03 08:06 GMT   |   Update On 2020-11-03 08:06 GMT
தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான கந்த சஷ்டி திருவிழாவும் இம்மாதத்தில் தான் தொடங்குகிறது.
ஐப்பசி மாதத்தில் அனைத்து நதிகளும், காவிரியில் சங்கமிப்பதாக ஐதீகம். இந்த மாதத்தில்தான் காவிரியில் நீராடும் ‘துலா நீராடல்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான கந்த சஷ்டி திருவிழாவும் இம்மாதத்தில்தான் தொடங்குகிறது.

ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவாலயங்கள் தோறும், உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும்.

இந்து பண்டிகைகளில் மிகவும் முக்கியமான தீபாவளித் திருநாள், இந்த ஐப்பசி மாதத்தில்தான் வருகிறது. இதனை வடஇந்தியாவில் ‘லட்சுமி பூஜை’ என்றும், வங்காளத்தில் ‘காளி பூஜை’ என்று கொண்டாடுகிறார்கள். தீபங்களை வரிசைப்படுத்தி வைத்து வழிபடும் தினத்திற்கு ‘தீபாவளி’ என்று பெயர்.

திருமால் மக்களுக்காக மருத்துவராக தோன்றிய நாளே, தன்வந்திரி ஜெயந்தியாகும். நோய் வராமல் தடுக்கவும், நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது. ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று, திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவான் தோன்றினார். எனவே திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவானை வழிபட ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும். தன்வந்திரி, விஷ்ணு அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும், இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி அளிக்கிறார். திருமாலின் 24 அவதாரங்களில் 17-வது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும்.

ஐப்பசி வளர்பிறை பிரதமை அன்று கிருஷ்ண பகவான் கோகுல மக்களை கடும் மழை மற்றும் புயலில் இருந்து காப்பாற்ற, கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார். கோவர்த்தன கிருஷ்ணரை வழிபட நம்முடைய கவலைகள் மற்றும் துயரங்கள் நீங்கி வாழ்வில் வசந்தம் வீசும்.

ஐப்பசி மாதத்தில் தேய்பிறை துவாதசி, ‘கோவத்ச துவாதசி’ என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து வழிபாடு செய்ய வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

முருகப்பெருமானுக்கு நாள், நட்சத்திரம், திதி ஆகிய மூன்று முறைகளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாள் விரதம் என்பது வெள்ளிக்கிழமை தோறும் கடைப்பிடிப்பதைக் குறிக்கும். இவ்விரதம் ‘முருகன் சுக்ர வார விரதம்’ என்றழைக்கப்படுகிறது. முருகன் சுக்ரவார விரதம் என்பது ஐப்பசி மாத முதல் வெள்ளி தொடங்கி மூன்று ஆண்டுகள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையானது பகலில் ஒரு வேளை உணவு உண்டும், இரவில் பழம் உண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையால் துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி (விஜயதசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை, மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவது ‘கேதார கவுரி விரதம்’ ஆகும். இவ்விரத முறையைப் பின்பற்றியே, பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றாள். இதனால் இறைவன் ‘மாதொரு பாகன்’, ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்ற திருநாமம் பெற்றார். இவ்விரத முறையில் அதிரசம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இவ்வழிபாட்டில் நோன்பு கயிறு வைத்து வழிபட்டு இறுதியில் எல்லோர் கையிலும் அணிவிப்பார்கள். இவ்விரத முறையை மேற்கொள்வதால், தம்பதியர் ஒற்றுமை பலப்படும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். நல்ல எண்ணங்கள் ஈடேறும் என்பது நம்பிக்கை.

ஐப்பசி மாத வளர்பிறையில் வருவது, ‘பாபாங்குசா ஏகாதசி’ ஆகும். இது பாவங்களைப் போக்கும் கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும். நோய், பசிப்பிணி நீங்கும். நிம்மதியை நிலைத்திருக்கச் செய்யும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், எம பயத்தில் இருந்து விடுபடுவார்கள், நரக வேதனை அவர்களை வாட்டாது என்று புராணங்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News