ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை 3-ந் தேதி தொடங்குகிறது

Published On 2020-08-01 08:44 GMT   |   Update On 2020-08-01 08:44 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் ஆடி களப பூஜை நடக்கிறது. பூஜை 3-ந் தேதி தொடங்குகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் களப பூஜை 12 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வருகிற 3-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை 12 நாட்கள் களப பூஜை நடக்கிறது. இதையொட்டி வருகிற 3-ந் தேதி காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகத்துடன் பூஜை தொடங்குகிறது.

அன்றைய தினம் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்படும் தங்கக்குடத்தில் சந்தனம், களபம், பச்சைக்கற்பூரம், ஜவ்வாது, கோரோசனை, பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் கலந்து கலசப் பிறையில் வைத்து மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ பூஜை செய்கிறார். அதன்பிறகு களபம் நிரப்பப்பட்ட அந்த தங்கக்குடத்தை பஞ்சவாத்தியம், மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

பின்னர் தங்க ஆபரணங்கள், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை சாயராட்சை தீபாராதனையும் இரவு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம், அம்மன் பல்லக்கில் கோவில் உள் பிரகாரத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் வைத்து தாலாட்டும் நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதே போல ஆடி களபபூஜை வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. 15-ந்தேதி அதிவாச ஹோமம் என்ற யாகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் நடந்து வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கோவில் விழாக்கள் நடத்தவும், பக்தர் கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்தே பக்தர்கள் இல்லாமல் ஆடி களப பூஜை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News