லைஃப்ஸ்டைல்
அழகூட்டும் நெக்லஸ் வகைகள்

புடவையோ சுடிதாரோ, அழகூட்டும் நெக்லஸ் வகைகள்

Published On 2021-10-11 07:27 GMT   |   Update On 2021-10-11 07:27 GMT
கழுத்தை ஒட்டி அணிபவை, சற்றே இறக்கி அணியக்கூடியது, தளர்வாய் அணியக்கூடியது, மெலிதாகவோ அடர்த்தியாகவோ என்று நெக்லஸில் பல வகைகள் இருக்கிறது.
பெண்கள் கழுத்தில் விரும்பி அணியும் நெக்லஸ், போடும் ஆடைகளுக்கு பொறுத்தமானதாக இருந்தால்தான் அழகு. நெக்லஸ்களில் பல வகைகள் உண்டு. கழுத்தை ஒட்டி அணிபவை, சற்றே இறக்கி அணியக்கூடியது, தளர்வாய் அணியக்கூடியது, மெலிதாகவோ அடர்த்தியாகவோ என்று இவற்றில் பல வகைகள் இருக்கிறது.

காலர் நெக்லஸ்

பொதுவாக தங்கம், கற்கள் பதித்து பெண்கள் பட்டுச் சேலைகளுக்கு அணியக்கூடியது இந்த வகைதான். இது கழுத்தை ஒட்டி சற்று தளர்வாக ஆங்கில எழுத்தான ‘யூ’ வடிவத்தில் இருக்கக்கூடியது. இதை யூ நெக் ப்ளவுஸ், போட் நெக் ப்ளவுஸ் அல்லது இருக்கமான கழுத்துள்ள சுடிதார், கவுன் போன்றவற்றிற்கும் அணியலாம். இந்த நெக்லஸ் 12 -14 அங்குலம் நீளத்தில் இருக்கும்.

சோக்கர்

இது கழுத்தை அழுத்தி பிடித்துக் கொண்டிருக்கும், அகலமான ஒரு அணிகலன். இந்த சோக்கர் வகை நகையை புடவை, கவுன், லெஹங்கா, நீளமான ஸ்கர்ட் போன்றவற்றிற்கு அணியலாம். பட்டு ப்ளவுஸ் உடன் அணியும் போது இதை பெரிய விசேஷங்களுக்கு அணியலாம். துண்மையான ஃபிலிகிரி வேலைப்பாடும் பட்டை தீட்டாத கற்களும் பதிக்கப்பட்ட சோக்கர்கள் டிசைனர் புடவைகளுக்கும், அதிக வேலைப்பாடு கொண்ட புடவைகளுக்கும் அட்டகாசமாக இருக்கும்.

பிப் நெக்லஸ்

இது குழந்தைகளுக்கு அணிவிக்கும் பிப் போல மெல்லிய இருபக்க சங்கிலியின் முடிவில் அகலமான நெக்லஸ் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். இது நம் மார்புப் பகுதியின் மேற்பரப்பு அனைத்தையும் மறைக்கும் என்பதால் முன்புறம் அதிக வேலைப்பாடு இல்லாத ஆடைகளுக்கு இது மிக பொருத்தமாக இருக்கும்.

பல பட்டைகள் கொண்ட ஸ்ட்ரிங் நெக்லஸ்

இது பல அடுக்கு அல்லது பட்டைகள் கொண்ட அகலமான அதே சமயம் நீளமாக அணியக்கூடிய நெக்லஸ் ஆகும். முத்துக்கள், பட்டை தீட்டாத கற்கள், பவளம், பல நிறங்கள் கொண்ட பொடி மணிகள், கருப்பு மணி போன்றவற்றைகள் கோர்க்கப்பட்ட மெல்லிய இழைள் இணைந்ததாக இந்த நெக்லஸ் இருக்கும். இந்த நெக்லஸ் புடவை, சுடிதார், டாப்ஸ் மற்றும் குர்தியுடன் அணிந்து கொள்ள பாந்தமாக இருக்கும்.

ஒப்பரா நெக்லஸ்

இது இளம் பெண்கள் அணியக்கூடிய சுடிதார், ஆழமான கழுத்து கொண்ட கவுன் அல்லது ப்ளவுஸ் போன்றவற்றிற்கு பொருத்தமாக இருக்கும். இது 26 முதல் 36 அங்குல நீளம் கொண்டதாக இருப்பதால் ஒரே அடுக்காகவோ, 2 அல்லது 3 அடுக்குகளாகவோ மடித்தும் அணிந்து கொள்ளலாம். மாலை வேளை பார்ட்டி போன்றவற்றிற்கு அணிந்து கொள்ள கவர்ச்சியான நெக்லஸ் இது.

பிரின்சஸ் நெக்லஸ்

இது 17 முதல் 20 அங்குல நீளம் இருக்கக்கூடிய நெக்லஸ் ஆகும். இது மிக லேசாகவோ அடர்த்தியான தொடர் வடிவமைப்பு கொண்டதாக (அதாவது அகல நீளம் அதிகமாக) இருக்கும். இந்த நெக்லஸ் வகை குர்த், சுடிதார் மற்றும் புடவைகளுக்கு தோதாக அணிந்து கொள்ளலாம். இதன் அடர்த்தி மற்றும் அளவிற்கு ஏற்ப எளிமையான மற்றும் ஆடம்பரமான ஆடைகளுக்கு பொருத்திக் கொள்ளலாம். இந்த வகை நெக்லஸ்கள் கழுத்தில் தொடங்கி வயிற்றுப் பகுதி வரை கூட அடர்த்தியாக நீண்டு இருக்கும். அதனால் இதை இளவரசிகள் அணியக்கூடியது என்ற வகையில் பிரின்சஸ் நெக்லஸ் என்று அழைக்கின்றனர்.
Tags:    

Similar News