உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

இயற்கை விவசாயம்- விவசாயிகளுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்

Published On 2021-12-28 07:58 GMT   |   Update On 2021-12-28 07:58 GMT
மாதிரிகள் பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்ற பிறகு சான்று பணி மேற்கொள்ளப்பட்டு தரமான விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும்.
குடிமங்கலம்:

குடிமங்கலம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள, விதைப்பண்ணை, அங்ககச்சான்று பண்ணை மற்றும் விதை சுத்தி நிலையங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் சுப்பையா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். 

முதற்கட்டமாக சோமவாரப்பட்டியில் விவசாயி பழனிசாமி தோட்டத்தில், அமைக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதை பண்ணையில் அறுவடை செய்யப்பட்ட கதிர்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் சுப்பையா கூறியதாவது:-

வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம், கோ எச்.எம்., 8, பல்வேறு சிறப்புகளை கொண்டது. இவ்விதை உற்பத்திக்காக பராமரிக்கப்படும் விளைநிலங்களில் எல்லை பயிராக ஆண் பயிர் நடப்படும். பெண் பயிர்களின் வளர்ச்சி, பூ பருவம், பின் பூ பருவம், முதிர்ச்சி மற்றும் கதிர்கள் என 5 நிலைகளில் ஆய்வு செய்யப்படும். குறிப்பிட்ட குணாதிசயங்கள் இல்லாத பயிர்கள் உடனடியாக அகற்றப்படும். ஆண் பயிர்கள் 110 நாட்களில் 167-177 செ.மீ., பெண் பயிர்கள் 105 நாட்களில் 160-174 செ.மீ., வளரும்.

கதிர் ஆய்வு பணிக்குப்பிறகு  விதை குவியல், சுத்தி நிலையம் அனுப்பி வைக்கப்பட்டு சுத்தம் செய்து மாதிரி எடுக்கப்படும். விதை மாதிரிகள், புறத்தூய்மை 98 சதவீதம், ஈரப்பதம் 12 சதவீதம், முளைப்புத்திறன் 90 சதவீதம், பிற ரக கலவன் 0.5 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். மாதிரிகள் பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்ற பிறகு சான்று பணி மேற்கொள்ளப்பட்டு தரமான விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும். 


தற்போது நஞ்சில்லா உணவு, அங்ககச்சான்று பெற்ற பொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. '

எனவே விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் குறிப்பிட்ட அளவு பகுதியில், முடிந்த அளவு இயற்கை விவசாயம் மேற்கொள்ள வேண்டும். அதன் நம்பகத்தன்மையை பொறுத்து முழு வயலுக்கு அங்கக பண்ணையம் செய்து பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றார். 

தொடர்ந்து அப்பகுதியிலுள்ள உளுந்து வம்பன் -8 ஆதார நிலை விதைப்பண்ணையிலும் ஆய்வு செய்யப்பட்டு எல்லோ மொசைக் வைரஸ் பாதிக்கப்பட்ட செடிகள் அகற்றப்பட்டது.ஆய்வின் போது விதை சான்று துணை இயக்குனர் வெங்கடாச்சலம், விதை சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து, விதை சான்று அலுவலர்கள், விதை ஆய்வாளர்கள், உதவி விதை அலுவலர்கள் உடனிருந்தனர். 
Tags:    

Similar News