செய்திகள்
மலை ரெயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பாறாங்கல், மரக்கிளைகள்

ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்குவரத்து ரத்து

Published On 2019-11-16 04:50 GMT   |   Update On 2019-11-16 04:50 GMT
ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். பழமைவாய்ந்த இந்த மலை ரெயிலை உலக பாரம்பரிய சின்னமாக கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியார் மேட்டுப்பாளையம் , கல்லாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் பெய்துவரும் மழை காரணமாக அடிக்கடி மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

கடந்த 11-ந் தேதி இரவு பெய்த பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு ரெயில் பாதையில் சிறிய, பெரிய பாறாங்கல் உருண்டு விழுந்தன.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து கடந்த 12, 13ஆகிய 2 நாட்கள் மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.

ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்ததும் மீண்டும் கடந்த 14-ந் தேதி மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மீண்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலை ரெயில் பாதையில் அடர்லி-ஹில் குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு ரெயில் பாதையில் பெரிய பாறாங்கல் உருண்டு விழுந்தது. மண் சரிந்து ரெயில் பாதையை மூடியது. ரெயில் பாதையில் இருந்த மரக்கிளைகள் சாய்ந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் மலை ரெயிலில் பயணம் செய்ய வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலை ரெயில் இருப்புப் பாதை பொறியாளர் ஜெயராஜ் தலைமையில் ரெயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த பின்னர் தான் மீண்டும் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

Similar News