ஆன்மிகம்
மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டும் ரத்து

Published On 2021-04-10 02:35 GMT   |   Update On 2021-04-10 02:35 GMT
கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.
மதுரை :

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் 22-ந்தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், 23-ந்தேதி திக்கு விஜயமும், 24-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 25-ந் தேதி தேர் திருவிழாவும் நடை பெற இருந்தது.

அதே போன்று அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் 26-ந் தேதி எதிர்சேவையும், 27-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் உள்ளிட்ட திருவிழாக்கள் நடக்க இருந்தன. அதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றின் 2-ம் அலை தீவிரமாக உள்ளதால் வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மதுரை சித்திரை திருவிழா கடந்த ஆண்டைப் போல் ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று பக்தர்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் கோவில் அதிகாரிகள், பட்டர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.



இக்கூட்டத்தில் திருவிழா நடத்துவது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் திருவிழா நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா பரவல் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. எனவேதான் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.” என்றார்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சட்டமன்ற தேர்தல் காரணமாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது எல்லாம் அரசு எவ்வித கட்டுப்பாடும் விதிக்காமல் தேர்தல் முடிந்த பிறகு திருவிழாக்களுக்கு தடை விதித்தது பக்தர்களை பெரிதும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.

எனவே இந்த ஆண்டாவது கண்டிப்பாக திருவிழாவை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News