ஆன்மிகம்
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா(பழைய படம்)

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் 9-ந்தேதி தூக்க திருவிழா

Published On 2021-03-04 09:05 GMT   |   Update On 2021-03-04 09:05 GMT
பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் 9-ந்தேதி நடக்க உள்ள தூக்க திருவிழாவில் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் தூக்க திருவிழா வருகிற 9-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வருகிற 18-ந் தேதியன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை பள்ளி உணர்த்தல் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, கணபதி ஹோமம், சோபன சங்கீத பூஜை, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.

திருவிழாவின் முதல் நாளன்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்புபூஜை, அம்மன் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மேலதாளம் முழங்க அம்மன் எழுந்தருளி கண்ணநாகம் பகுதி வழியாக கோவில் வந்தடைகிறது. இரவு 7 மணிக்கு கோவில் தந்திரி பிரம்ம ஸ்ரீ ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து தூக்க திருவிழா தொடக்க நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிறது. 2-ம் நாள் விழாவில், மதியம் ஓட்டன் துள்ளல், மாலை திரு விளக்கு பூஜை, இரவு இன்னிசை, நடனம் நடக்கிறது. 3-ம் நாளன்று காலை 8 மணிக்கு தூக்ககாரர்களுக்கு மருத்துவ பரிசோதனை, மதியம் ஓட்டன் துள்ளல், இரவு இன்னிசை, நாட்டிய நாடகம் நடைபெறும். தொடர்ந்து வரும் விழா நாட்களில் சமய சொற்பொழிவு, தூக்க நேர்ச்சைக்கான குலுக்கல், காப்பு கட்டு, சமய வகுப்பு, மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பண்பாட்டு மாநாடு நடக்கிறது.

6-ம் நாள் திருவிழாவில் இரவு பண்பாட்டு மாநாடு நடக்கிறது.

விழாவின் 9-ம் நாள்(17-ந் தேதி) மாலை 6 மணிக்கு வண்டியோட்டம் எனப்படும் வெள்ளோட்டம் நடைபெறும். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தூக்க நேர்ச்சை வருகிற 18-ந் தேதி கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது. அதாவது, பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தரிசனம் செய்தவுடன் உடனே அங்கிருந்து வெளியே செல்லவேண்டும். கூட்டம் கூடக்கூடாது. தூக்ககாரர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தூக்க நேர்ச்சை நடத்தமுடியாமல் பதிவு செய்திருந்தவர்களுக்கு தூக்க நாளில் நடையில் நிறுத்தி நேர்ச்சை நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சூரிய தேவன் தம்பி, துணை தலைவர் பிரேம் குமார், துணை செயலாளர் பிஜு குமார், கமிட்டி உறுப்பினர்கள் விலோசனன், கிருஷ்ண குமார், சந்திரசேகரன், சாம்பசிவன் நாயர், விஜயகுமார், சுசீந்திரன் நாயர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News