செய்திகள்
கோப்புப்படம்

2019-ம் ஆண்டு இந்தியாவின் துல்லிய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியாகினர் - பாகிஸ்தான் முதன் முதலாக ஒப்புதல்

Published On 2021-01-10 20:53 GMT   |   Update On 2021-01-10 20:53 GMT
பாலகோட்டில் 2019-ம் ஆண்டு இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியானதை பாகிஸ்தான் முதன் முதலாக ஒப்புக்கொண்டது.
புதுடெல்லி:

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் 2019-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், நமது துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் 40 துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) பலியானார்கள். இந்த கொடூர தாக்குதல், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்க நரேந்திர மோடி அரசு முடிவு செய்தது. அந்த வகையில், புல்வாமா தாக்குதல் நடந்த 12 நாளில் (பிப்ரவரி 26, 2019) இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்திற்குள் பறந்து, அங்கு பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாத முகாம்களை குண்டு போட்டு அழித்து, அவற்றில் பதுங்கி இருந்த பல நூறு பயங்கரவாதிகளை கொன்று குவித்தது. இது பாகிஸ்தானுக்கு மரண அடியாக அமைந்தது.

இந்த உயிர்ப்பலிகளை பாகிஸ்தான் இதுவரை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் உருது செய்தி சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில், அந்த நாட்டின் ஓய்வுபெற்ற தூதரக உயர் அதிகாரி ஆகா ஹிலாலி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய விமானப்படை பாலகோட்டில் நடத்திய தாக்குதல், போர்ச்செயல் ஆகும். அதில் 300 பேர் பலியானார்கள். எங்கள் (பாகிஸ்தான்) தாக்குதல் இலக்கு, அவர்களின் (இந்தியாவின்) தலைமையகம். ஆனால் நாங்கள் கால்பந்து மைதானத்தில் குண்டுகளை போட்டு விட்டோம். எங்கள் பதிலடி பலவீனமாக இருந்தது-. இவ்வாறு அவர் கூறினார்.

பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மறுநாளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழிதாக்குதல் இலக்கு இயல்பாகவே ராணுவ நோக்கம் அற்றது என்று பாகிஸ்தான் கூறி வந்தது. இந்த நிலையில், அதை மறுக்கிற விதத்தில் ஆகா ஹிலாலி, எங்களது தாக்குதல் இலக்கு அவர்களது தலைமையகம் (இந்திய ராணுவத்தின் 25-வது பிரிவு தலைமையகம்) என்றும், ஆனால் குண்டுகளை கால்பந்து மைதானத்தில் போட்டுவிட்டோம் என்றும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News